மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார்.
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார். இந்தியா கூட்டணி சார்பாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
அதேபோல, மாலை 6 மணிக்கு கோயமுத்தூர் செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார்.
ராகுல் காந்தி வருகையை ஒட்டி, நெல்லையில் இன்று காலை 6 மணி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.