மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான தேதி இம்மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட பேச்சு வார்த்தையில், ஏழு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என அதிமுகவிடம் தேமுதிக வலியுறுத்தி இருந்தது. இதனிடையே அதிமுக தேமுதிக இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைத்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி உயர்மட்ட குழு உறுப்பினரும், கழகத் துணைச் செயலாளருமான எல்கே சுதீஷ், கழக அவைத் தலைவர் டாக்டர். இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணைச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.