Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவுடன் கூட்டணி.! தேமுதிக மாவட்ட செயலாளர்கள் விருப்பம்! பிரேமலதாவின் முடிவு என்ன..?

premalatha

Senthil Velan

, புதன், 7 பிப்ரவரி 2024 (13:10 IST)
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்று திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
 
சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனிடையே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 10  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:
 
தேமுதிக தீர்மானங்கள்:
 
தீர்மானம்: 1 தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் அதன் மூலம் ஒரு நல்லாட்சியை தர வேண்டும் என்று உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் என்றைக்கும் அனைத்து நெஞ்சத்தில் வாழ்கின்ற தேமுதிக நிறுவனத்தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் மறைவு வாழ்வில் ஈடு செய்ய முடியாதது. கேப்டன் அவர்களுக்கும், சமீபத்தில் மறைந்த கழகத்தினருக்கும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
தீர்மானம்: 2 மறைந்த உலகத் தமிழ் தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை அறிவித்த பிரதமருக்கும்., மத்திய அரசுக்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு, அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
தீர்மானம்: 3 சாதி, மத, பேதமின்றி எல்லா அரசியல் தலைவர்களோடு இணக்கமாக வாழ்ந்து மறைந்த கேப்டனின் மறைவிற்கு சாதி, மத, அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி மற்றும் புகழஞ்சலி செலுத்திய அனைவருக்கும் தேமுதிக நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
 
தீர்மானம்: 4 மீலாத்துயரிலும், துக்கத்திலும் மனம் தளராமல் அவர் விட்டுச் சென்ற கொள்கையை அவர்தம் பாதையில் சென்று வெற்றியடைய அயராமல் உழைத்திடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா என்றென்றும் எதற்கும் அஞ்சாமல் துணை நின்று வெற்றி படைப்போம் என்று மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக தொண்டர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் உறுதி ஏற்போம் என்று தேமுதிக பறைசாற்றுகிறது.
 
தீர்மானம்: 5 தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் சந்தன பேழையில் உறங்கிடும் புரட்சிக் கலைஞர் கேப்டனின் உறைவிடத்தை கேப்டன் கோயிலாக மாற்றி தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்குமாறு கழக பொதுச்செயலாளரிடம் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம்: 6 பசியோடு வரும் அனைத்து மக்களுக்கும் உணவு படைத்து அவர்களின் பசியாற செய்து அந்த மகிழ்ச்சியில் வாழ்ந்து மறைந்த பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டனின் சன்னதியில் தினந்தோறும் அன்னதானம் மற்றும் உதவிகள் செய்திட வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதான அறக்கட்டளை (VALLAL VIJAYAKANT MEMORIAL ANNATHANA TRUST) உருவாக்கிய கேப்டன் குடும்பத்தினருக்கு இந்த கூட்டம் நன்றி செலுத்துகிறது.
 
நீண்ட நாட்களாக நீங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கழகத்தை சேர்ந்த அனைவரின் குடும்பங்களில் நிகழும் பிறந்தநாள் திருமணநாள், சுப நிகழ்ச்சிகள், குடும்பத்தாரின் நினைவு நாள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கேப்டன் கோயிலில் அன்னதானமாகவோ, நலத்திட்ட உதவிகளாகவோ தலைமை கழகத்திடம் முன் அனுமதி பெற்று தங்களின் உதவிகளை செய்யலாம் என்று தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம்: 7 பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டனுக்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவிட தலைமை கழகத்திடம் ஆலோசனை செய்து மாவட்ட கழகச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் சிலை அமைக்க முடிவு எடுப்பதாக இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
தீர்மானம்: 8 வருகின்ற பிப்ரவரி 12 கொடி நாள் அன்று அனைத்து கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட அனைத்து கிளைகளிலும் புரட்சி தீபக் கொடி ஏற்றிடவும், தீவிர கட்சி உறுப்பினர் சேர்க்கை சேர்க்கவும் இந்த கூட்டத்தில் உறுதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
 
தீர்மானம்: 9 தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வருவதற்கு முன் கேப்டன் புகழை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் கிராம சபை கூட்டங்கள், தெரு முனை பிரச்சாரங்கள், சிறிய அளவிலான கூட்டங்கள் மூலம் கேப்டன் அவர்களின் புகழ் மக்களுக்கு சென்றடையும் வகையில் கூட்டங்கள் நடத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் தேமுதிகவின் நான்கு மண்டலங்களில் கேப்டனின் நினைவேந்தல் புகழஞ்சலியை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திட தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.

 
தீர்மானம்: 10 தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரபூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு வழங்கி இந்த கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3வது நாளாக கருத்து கேட்கும் திமுக தேர்தல் அறிக்கை குழு.. கனிமொழி எம்பி விறுவிறுப்பு..!