காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடக் கூறி காங்கிரஸ் தொண்டர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில தேர்தல்களாக தமிழகத்தில் வீழ்ச்சியை சந்தித்து வரும் காங்கிரஸ் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலாவது தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கேற்றவாறு கூட்டணிக் கட்சியான திமுக விடம் தொகுதிகளைக் கேட்டு பெற்றுள்ளது. பாஜக மற்றும் அதிமுக அரசு மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியால் இம்முறைக் காங்கிரஸுக்கு தமிழகத்தில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் பெற்றுள்ள தொகுதிகளில் கன்னியாகுமரியும் ஒன்று. கன்னியாகுமரி நீண்டகாலமாக காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதி. கடந்த ஆண்டு ஓகிப் புயலின் போது மக்களை உடனடியாக சென்று களத்தில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அதனால் அங்குள்ள மீனவ மக்களுக்கு ராகுல் காந்தி மீது நல்ல அபிப்ராயம் உள்ளதாகத் தெரிகிறது. இவற்றையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்து வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் தொகுதியாகக் கன்னியாகுமரியை குறிப்பிட்டு ஏற்கனவே ராகுலுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் வட்டாரத்தில் செய்திகள் உலாவந்து கொண்டிருந்தன. மேலும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று ராகுல் காந்தி பெயரில் தொண்டர்கள் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ‘மோடி ஆட்சிக்கு வந்தபிறகு வடக்குக்கும், தெற்குக்கும் ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது மோடி வந்து நேரில் பார்க்கவில்லை. அதே போல டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடிய போதும் அவர் வந்து பார்க்கவில்லை. இவையெல்லாம் தமிழக மக்களிடையே ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற சமயத்தில் ராகுல் காந்தி தமிழகத்தில் ஓர் தொகுதியில் போட்டியிட்டால் மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும். வடக்கிற்கும், தெற்கிற்கும் இருக்கிற இடைவெளி நிரப்பப்படும். ஆகவே ராகுல் காந்தியை நாங்கள் தமிழகத்தில் போட்டியிட வேண்டுகோள் விடுத்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிட இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் போல கர்நாடகாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.