விழுப்புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வைகோவைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் களம் பிரச்சாரங்களால் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாமக உறுப்பினர் வடிவேல் ராவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அதற்கு முன்னதாக விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்த வைகோவைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அப்போது ‘விழுப்புரம் தொகுதியில் வைகோ பிரச்சாரத்தில் பேசிவிட்டு சென்றிருக்கிறார். அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவார். பருப்பு கொள்முதலில் ஊழல், நெடுஞ்சாலையில் ஊழல் எனத் தன் இஷ்டம் போலக் கொள்கைகளையும் மாற்றிக்கொள்வார்; நிலைப்பாட்டையும் மாற்றுவார். அவர்களின் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனக் கதையாக மாறியுள்ளது.
ஒரு கட்சியை நடத்தும் அவர் அடுத்த கட்சியின் சின்னத்தில் நிற்கிறார். இவரெல்லாம் ஒரு தலைவரா ?. மதிமுகவில் உள்ள மவைத் தூக்கிவிட்டு, திமுக என்றே வைத்துக்கொள்ளலாம். இவர்களுக்கு கொள்கையாவது, கத்தரிக்காயாவது? நாட்டு மக்கள், தொண்டரைக் குறித்து இவர்களுக்குக் கவலை இல்லை. பதவி வெறிதான் காரணம். சொந்தக் கட்சியை அடமானம் வைத்துவிட்டுப் பேச உங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது?’ எனக் கோபமாகப் பேசியுள்ளார்.