முதன்முறையாக 108 எம்.பி கேமரா மொபைல்!! – அசர வைத்த எம்ஐ!

புதன், 6 நவம்பர் 2019 (18:50 IST)
ஷாவ்மீ நிறுவனம் சீனாவில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 108 எம்.பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் பலரை கவர்ந்துள்ளது.

உலகமே ஸ்மார்ட்ஃபோன் மயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் பலர் போன் வாங்குவதே அதன் கேமராவை பொறுத்துதான் என்றாகிவிட்டது. விதம்விதமாக செல்ஃபி எடுக்க, வீடியோக்கள் எடுக்க அதை சமூக வலைதளங்களில் பதிய என செல்போனில் கேமராவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதனாலேயே பல ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் தங்கள் மொபைல்களின் கேமரா தரத்தை உயர்த்தி கொண்டே செல்கின்றன. இந்நிலையில் தற்போது வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன்களிலேயே அதிக தரம் கொண்ட புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஷாவ்மீ நிறுவனம்.

இந்நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள எம்.ஐ சிசி9 ப்ரோ மாடல் 108 எம்.பி தரமுடைய கேமராவோடு வெளியாகியிருக்கிறது. 6.4 இன்ச் தொடுதிரை, ஸ்க்ரீன் சென்சார் அமைப்பை கொண்டுள்ள இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 730 மேம்படுத்தப்பட்ட ப்ராசஸரை கொண்டுள்ளது.

டெலிபோட்டோ, வைட் லென்ஸ் ஆப்சன்களுடன் கூடிய பின்பக்க கேமராவால் எந்த வித புகைப்படத்தையும், வீடியோவையும் மிகவும் துல்லியமாக எடுக்க முடியும். 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என்ற இரண்டு வகைகளில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

6 ஜிபி ரேம் கொண்ட மாடல் 128 ஜிபி மெமரி வசதி கொண்டது. இதன் விலை இந்திய மதிப்பில் 28 ஆயிரம் ரூபாய். 8 ஜிபி ரேம் கொண்ட மாடல் 256 ஜிபி மெமரி வசதி கொண்டது. இதன் விலை 31 ஆயிரம் ரூபாய்.

இன்னும் இந்த மாடல் இந்திய மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வராத போதும் சீனாவில் பரவலாக விற்பனை கண்டுள்ளது. டிசம்பரில் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வினையான விளையாட்டு - நண்பனை சுட்டது ஏன்? விஜய் பகீர்!