பிரபல ஹாலிவுட் சூப்பர்ஹீரோ தொடர்களை வழங்கி வரும் டிஸ்னி ப்ளஸ் இந்தியாவில் ஹாட்ஸ்டார் ஆப் மூலம் அறிமுகமாக உள்ளது.
பிரபல ஹாலிவுட் திரைப்பட நிறுவனமான டிஸ்னி நிறுவனத்தின் ஆன்லைன் மொபைல் அப்ளிகேசன் டிஸ்னி ப்ளஸ். இந்த ஆப் மூலம் டிஸ்னியின் சமீபத்திய படங்கள் மட்டுமல்லாது புதிய வெப் சீரிஸ்களையும் காண முடியும். அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ள இந்த ஆப் இந்தியாவில் ஹாட்ஸ்டாரோடு இணைந்து தங்கள் நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது.
சமீப காலமாக ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஆன்லைனில் படம் பார்க்கும் அப்ளிகேசன்கள் மக்களிடையே பரவலான வரவேற்பு பெற்றுள்ள நிலையில் டிஸ்னி இந்தியாவில் தனது வெப் சிரீஸ்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஹாட்ஸ்டாரோடு இணைந்து வரும் மார்ச் முதல் இந்த சேவையை வழங்க உள்ளது.
சமீபத்தில்தான் மார்வெல் காமிக்ஸ் சார்ந்த புதிய தொடர்களின் ட்ரெய்லர்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. மேலும் டிஸ்னி ப்ளஸில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் வார்ஸின் மேண்டலோரியன் உலகம் முழுவதும் பரவலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இதனால் இந்தியாவில் மார்ச்சுக்கு பிறகு ஹாட்ஸ்டாரின் சப்ஸ்க்ரைப் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்னிப்ளஸ் இணைந்த பிறகு ஹாட்ஸ்டாரின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.