15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் முச்சதம் அடித்து தனி சாதனை படைத்துள்ளார் ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்:
நேற்று ஐபிஎல் 34 வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் இடையே நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது.
ஜோஸ் பட்லர் சரவெடி:
இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 217 ரன்கள் எடுத்ததே அதிகப்பட்ச ரன்களாக இருந்தது. இதனை அந்த அணியே தற்போது முறியடித்து 222 ரன்கள் எடுத்து புதிய இலக்கை மற்ற அணிகளுக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணி ஒப்பனர் ஜோஸ் பட்லர்.
இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக 100 ரன்களும், கொல்கத்தா அணிக்கு எதிராக 103 ரன்களும், நேற்று டெல்லி அணிக்கு எதிராக 116 ரன்களும் எடுத்து முச்சதம் அடித்து தனி சாதனை படைத்துள்ளார் ஜோஸ் பட்லர். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.