சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியான ஒன் பீஸ் என்ற லைவ் ஆக்ஷன் வெப் சிரிஸ் 45 நாடுகளில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் சாதனை படைத்துள்ளது.
ஜப்பானில் மாங்கா (காமிக்ஸ்) மிகவும் பிரபலமான ஒன்று. நருட்டோ, டிமான் ஸ்லேயர், அட்டாக் ஆன் டைட்டன் உள்ளிட்ட பல மாங்காக்கள் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. அதில் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள மாங்கா கதைதான் ஒன் பீஸ். இது அனிமே தொடராகவும் 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஜப்பானிய மாங்கா எழுத்தாளரான இச்சிரோ ஒடாவின் கை வண்ணத்தில் உருவான இந்த கதை தற்போது நெட்ப்ளிக்ஸில் லைவ் ஆக்ஷன் தொடராக வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.
கோல்ட் ரோஜர்ஸ் என்ற கடற்கொள்ளையர் ராஜாவை கடற்கொள்ளையர் அழிப்பு படையினர் கொல்கின்றனர். அவன் இறந்த பிறகு அவன் மறைத்து வைத்த ஏராளமான புதையலை தேடி பலரும் கடல் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் புதிய கடற்கொள்ளையர் யுகம் பிறக்கிறது. இது நடந்து 2 தசாப்தங்களுக்கு பிறகு கடற்கொள்ளையன் ஆக வேண்டும் என்ற கனவுடன் வருகிறான் மங்கி டி லுஃபி என்ற சிறுவன். அவனும் அவனது குழுவினரும் செய்யும் வீர தீர சாகசமே ஒன் பீஸ்.
இந்த தொடரின் லைவ் ஆக்ஷன் ட்ரெய்லர் வந்தபோது அனிமே ரசிகர்கள் பலருக்கு அனிமே லெவலுக்கு இல்லை என்ற அதிருப்தி இருந்தது. அதை தாண்டி தற்போது 45 நாடுகளில் நெட்ப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்படும் வெப் சிரிஸாக ட்ரெண்டிங்கில் நம்பர் 1ல் உள்ளது ஒன் பீஸ். இது நெட்பிளிக்ஸ் முன்னதாக வெளியிட்டு ட்ரெண்டான ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ், வெட்னஸ்டே உள்ளிட்ட வெப் சிரிஸ்களின் சாதனையை முறியடித்துள்ளது.