மீண்டும் அசெம்பிலாகும் ’அவெஞ்சர்ஸ்’: புதிய காட்சிகளுடன் வெளியீடு

திங்கள், 24 ஜூன் 2019 (15:31 IST)
மார்வெல் ரசிகர்களுக்காக ’அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் துணை நிறுவனமான மார்வெல் நிறுவனம் ஸ்பைடர் மேன், ஐயர்ன் மேன், போன்ற பல காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து, உருவாக்கிய காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை வைத்து திரைப்படங்களை உருவாக்க ஆரம்பித்தனர். அந்த திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் அந்த சூப்பர் ஹீரோக்களை ஒன்றுசேர்த்து ’அவெஞ்சர்ஸ்’ என்ற பெயரில் திரைப்படங்களை இயக்கி வெளியிட ஆரம்பித்தனர்.

அந்த ‘அவெஞ்சர்ஸ்’ தொடரின் கடைசி பாகமான ’அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 26 அன்று திரைக்கு வந்து உலகளவில் வசூல் சாதனை படைத்தது.

மேலும் அவெஞ்சர்ஸ் தொடருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ரசிகர்களின் வரவேற்பை கருத்தில் கொண்டு, வருகிற ஜூன் 28 ஆம் தேதி ’அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வர இருப்பதாக மார்வல் நிறுவனத்தின் மேலாளர் கெவின் பெய்ஜி கூறியுள்ளார்.

மேலும், மீண்டும் வெளிவரும் ‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படத்தில், இறுதியில் பல காட்சிகளும், காமிக்ஸின் தந்தை என அழைக்கப்படும் ஸ்டான்லீயின் புகழ் அஞ்சலியும், கூடுதலாக இடம்பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "பிக்பாஸுக்கு சென்ற சாண்டி" உண்மையை ட்விட்டரில் கொட்டிய முன்னாள் காதலி!