Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பாவை - பாசுரம் 2

திருப்பாவை - பாசுரம் 2
திருப்பாவை: பாசுரம் 2 
 
வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்! 
விளக்கம்: இந்தப் பாட்டில் நோன்பு நோற்பவர் செய்யக் கூடியவற்றையும் விலக்க வேண்டியவற்றையும் ஆண்டாள் கூறுகிறாள்.
 
இந்த வையத்தில் வாழும் பேறு பெற்றவர்களே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி வாழ, வாழ்வில் கடைத்தேற வேண்டிய வழியை ஆராய்ந்து,  திருப்பாற்கடலில் கள்ளத் துயில் கொண்டு கண்வளரும் பரமனின் திருவடியைப் போற்றிப் பாடி, நம் ஆசார்யர்களாகிற பெரியோர்களுக்கு இடுகின்றதான ஐயத்தையும், துன்பத்தே உழல்வார்க்கு இடும் பிட்சையையும் நம் சக்தி உள்ளளவும் இட்டு மகிழ்வோம். 
 
இப்போது, நமது நோன்புக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கூறுகிறேன்... காது கொடுத்துக் கேளுங்கள். நோன்பு நோற்கத் தொடங்கிய  பிறகு நாம் உடலுக்கு ஊட்டமும் உரமும் தரும் நெய் உண்ணக்கூடாது. பாலை உண்ணக் கூடாது. விடியற் காலத்தே உடற்தூய்மை பேண  நன்னீரால் குளித்துவர வேண்டும். பின்னர் வழக்கமாக நாம் மேற்கொள்ளும் கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் செய்தல், கருங்கூந்தலிலே  மலர்சூடி அழகு சேர்த்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தே விலக்குவோம்.
 
இவ்வாறு நம் முன்னோர்கள் எதைச் செய்யக்கூடாது என்று வைத்தார்களோ அவற்றை செய்யாதிருப்போம். பெருமான் பக்கலில் நின்று,  கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள்  ஆண்டாள். 

                                                                                                                                                         - ஸ்ரீ.ஸ்ரீ                                                                                                                                                               

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மார்கழி முதல் நாள் - திருப்பாவை (பாசுரம் 1)