முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த விழாவில், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம். இருப்பினும், இந்த ஆண்டு ஆவணி திருவிழா தொடங்க உள்ளதால், 30 நாட்களுக்கு மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
மண்டல பூஜை இன்று நிறைவடைந்ததையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தென்னங்குருத்து இலைகள், ரோஜா, அந்தோனியம், ஆர்கிட்ஸ், அன்னாசிப் பழங்கள், சோளக்கருது, கரும்பு எனப் பலவகையான பொருட்களால் கோயிலின் சண்முக விலாச மண்டபம், மூலவர் சன்னதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள் சன்னதிகள், கொடிமரம் மற்றும் நுழைவாயில் என அனைத்து பகுதிகளும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டன. இந்த அலங்காரப் பணியில் சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 110 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மண்டல பூஜை நிறைவுநாளை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9.30 மணிக்கு மண்டல பூஜை அபிஷேக பூர்த்தி பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்பட்டது.