திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி பெரும் திருவிழா வெகுவிமர்சையாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டம் வீதியுலா நடைபெற்றது.
இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5.20 மணிக்கு கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 4.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. மார்ச் 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு குடை வருவாயில் தீபாராதனை, மார்ச் 9ம் தேதி காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவை, 9 மணிக்கு சுவாமி வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறார்.
மார்ச் 10ம் தேதி மதியம் 12 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வரும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 12ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். மார்ச் 13ம் தேதி இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெற, மார்ச் 14ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.