நவகிரகங்களில் பலருக்கும் அதிக பயத்தை தரும் கிரகம் சனி. இது ஜாதகத்திலோ, தசாபுக்தியிலோ, கிரகப்பெயர்ச்சியிலோ எந்த விதத்திலாக இருந்தாலும், அதன் தாக்கம் நிச்சயமாக தீவிரமாகவே இருக்கும். "கெடுக்கும் சனியே கொடுக்கவும் செய்வான்" என்று சொல்லப்படினும், இவரது பெயரே பலருக்கும் குழப்பத்தையும் பயத்தையும் தரும், ஏனெனில் இவர்தான் ஆயுள்காரன்.
சனிதோஷத்தால் ஏற்படும் விளைவுகளில் சில: முயற்சிகளில் தடைகள், முன்னேற்றத்தில் தடைகள், பணிச்சுமை அதிகரிப்பு, அரசு வழியில் தடை, தொழிலில் நெருக்கடி, சோம்பல் அதிகரித்தல், உடல் நலக்குறைவு, விபத்துகள் போன்றவை. குறிப்பாக, தோல் நோய், எலும்பு தொடர்பான பிரச்சனைகள், நரம்பியல் சிக்கல்கள், சர்க்கரை நோய் போன்றவை வரக்கூடும்.
சனிதோஷ நிவர்த்திக்கான பரிகாரங்கள்:
தினமும் ஒரு கைப்பிடி அன்னத்துடன் சிறிதளவு எள் சேர்த்து காகத்திற்கு போடுவது.
சனிக்கிழமைகளில் காலை 6.15 - 6.45க்கு அகல் தீபம் ஏற்றி சிவன், அனுமன் துதி செய்யவும்.
சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன் மற்றும் சனிபகவான் காயத்ரி மந்திரங்களை ஜபிக்கவும்.
சனிப் பிரதோஷ தினத்தில் நந்தி தரிசனம் மற்றும் வில்வ அர்ச்சனை சிறந்தது.
திருநள்ளாறில் நளதீர்த்தத்தில் நீராடி, திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனி பகவானை வழிபடுவது நற்பலன் தரும்.
இரும்பு சட்டியில் ரூபாய் நாணயம் வைத்து, நல்லெண்ணை நிரப்பி அதில் முகம் பார்த்து தானம் செய்தல்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல், கோவில்களில் பக்தர்களுக்கு புளியோதரை வழங்குதல்.
அடிக்கடி சிவாலயத்திற்கு சென்று, பார்வதியை வழிபட்டு, நவகிரக சனிபகவானை வணங்குதல்.
இவற்றில் உங்களால் இயன்றதை செய்தாலே, சனியின் விளைவு குறைந்து, வாழ்க்கையில் நன்மை பெறலாம்.