துளசி என்பது தெய்வத்தன்மை வாய்ந்த ஒரு செடி என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாற்கடலைக் கடைந்தபோது, விஷ்ணுவின் அம்சமான தன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியால், விஷ்ணுவின் ஆனந்த கண்ணீரில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தன. அதுவே மரகதப்பச்சை நிறத்தில் துளசி தேவியாக மாறியது என்று புராணங்கள் கூறுகின்றன.
துளசி தேவி, பகவானிடம் பெற்ற வரத்தின்படி, யார் ஒருவர் வீட்டில் துளசி மாடம் வைத்து பூஜை செய்கிறாரோ, துளசி இலைகளால் விஷ்ணுவையும் லட்சுமியையும் வழிபடுகிறாரோ, அவர்களுக்கு விஷ்ணுவும் லட்சுமியும் எல்லா செல்வங்களையும் வழங்குவார்கள். இறுதியில், விஷ்ணு லோகத்தில் இடம் அளித்து அருள்புரிவார்கள்.
நம்மை பெற்று, வளர்த்து, பாதுகாத்த தாயை மதித்து அவளின் ஆசிகளை பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசி செடி வைத்து அதற்கு பூஜை செய்து சேவை செய்வதும் ஆகிய இந்த மூன்று செயல்களும் மனிதர்களுக்கு மிக சிறந்த முக்தியைக் கொடுக்கும் சேவைகள் என்று மகான்கள் கூறியுள்ளனர்.
துளசியை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெறலாம் என்பது நம்பிக்கை.