தமிழ் மாதமான ஆடி மாதத்தின் சிறப்பு மிக்க நாளான ஆடிப்பெருக்கில் மக்கள் காவிரி நதிக்கரைகளில் வழிபாடு செய்து வருகின்றனர்.
ஆடி 18ம் நாளை ஆடிப்பெருக்கு என மக்கள் கொண்டாடும் நிலையில், அந்நாளிலே காவிரி கரையோரங்களில் குவியும் மக்கள் முன்னோர்களுக்கு வேண்டிக் கொண்டு வழிபாடு செய்கின்றனர். பூ, பழம், வெற்றிலை வைத்த தட்டில் காசு வைத்து ஆற்றில் விடுவது ஆடிப்பெருக்கில் தொடரும் வழக்கமாகும். பிறகு காவிரியில் நீராடும் மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.
இந்த நாளிலே விவசாய மக்கள் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக வெற்றிலையில் சூடம் ஏற்றி ஆற்றில் விடுகின்றனர். இந்த நாளிலே திருமணமான தம்பதிகள் தாலி பிரித்துக் கோர்ப்பது சிறப்பம்சம்.
இன்று ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் காலை முதலே மக்கள் கூடி ஆடிப்பெருக்கை கொண்டாடி வழிபாடு செய்து வருகின்றனர். ஈரோடு அம்மா மண்டபம், திருச்சி காவிரி ஆற்றங்கரை பகுதிகள் மக்கள் ஆழமான பகுதிகளுக்கு சென்று விடாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் உள்ள பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K