ராகு-கேது பெயர்ச்சி முன்னிட்டு, திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று, தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணி அம்மனுடன் ராகு பகவான் தனி சன்னதியில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய துணைவியருடன் அருள்பாலிக்கிறார். இங்கு, பால் அபிஷேகத்தின் போது பால் நீலமாக மாறும் என்பது ஒரு பிரத்தியேக நம்பிக்கை.
இத்துடன், ராகு பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடத்தப்பட்டது. ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை நகர்வதை ராகு பெயர்ச்சி என அழைக்கின்றனர். இந்த ஆண்டு பெயர்ச்சி விழா கடந்த 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. இன்று நான்காம் கால பூஜைக்குப் பின், பால், சந்தனம், மஞ்சள் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கலசாபிஷேகம் நடத்தப்பட்டது. பிற்பகல் 4:20 மணிக்கு, ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நகர்ந்தார். தங்க கவச அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு, ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு செய்யவுள்ளாராம். மேலும், லட்சார்ச்சனை நிகழ்வு 28ம் தேதி வரை நடைபெறுகிறது.