ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதஸ்வாமி கோவிலில் சித்திரை மாத திருவிழா ஏப்ரல் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த புனித நிகழ்வில், தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
நேற்று மாலை, நம்பெருமாள் உபயநாச்சியாருடன் திருச்சிவிகையில் எழுந்தருளி, நெல்லளவுக் கண்டருளினார். பின்னர் ஆழ்வான் வழியாக, இரவு 9 மணிக்கு தாயார் சன்னதியை அடைந்தார். திமஞ்சனத்துக்குப் பிறகு, அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறையை வந்தடைந்தார்.
இன்று காலை 7.30 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் வீதியுலா செய்து, 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபத்தை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு தங்க குதிரையில் வலம் வந்து, இரவு 9 மணிக்கு திரும்புகிறார்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை அதிகாலை நடைபெறுகிறது. இதையடுத்து பக்தர்கள் குவிந்துள்ளனர். நம்பெருமாள், 5 மணிக்கு தோளுக்கினியானில் புறப்பட்டு, 6.30 மணிக்கு தேரோட்டம் அரங்கேறும். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.