நாளை சனி மகாபிரதோஷம் நடைபெறும் நிலையில் வக்ர சனியின் பார்வையில் உள்ள ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதன் மூலம் சனியின் பாதிப்பை குறைக்க முடியும்.
மாதம்தோறும் வரும் திதிகளில் சிறப்புடையதான திரயோதசி திதியில் சிவபெருமானை போற்றி வணங்கும் பிரதோஷ நாள் வருகிறது. அதுவும் பிரதோஷம் சனிக்கிழமையில் வருவது மிகவும் கீர்த்தி வாய்ந்தது. இந்த சனி பிரதோஷத்தை சனி மகா பிரதோஷம் என்பார்கள். சனிக்கிழமையில் வரும் இந்த மகாபிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவது ஆண்டின் 52 சனிக்கிழமைகளில் சிவபெருமானை வணங்கியதற்கு நிகரான அருளை தரும் என கூறப்படுகிறது.
இந்த சனிப்பிரதோஷ நாளில் சனி பகவானை வழிபடுவது அவரது உக்கிர பார்வையிலிருந்து நம்மை விடுவிக்கும். சனி பிரதோஷத்தில் சிவன் கோவில் செல்பவர்கள் நவக்கிரஹங்களில் சனிப்பகவானுக்கு சிறப்பு வேண்டுதல் செய்யலாம். சனி பகவான் பொதுவாக அர்த்திராஷ்டம், அஷ்டம காலங்களில் குறிப்பிட்ட ராசிக்காரர்களையே சோதிப்பார்.
ஆனால் சனி பகவான் வக்ர காலத்தில் பயணிக்கும்போது அனைத்து ராசிக்காரர்களுக்குமே சனியின் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த காலக்கட்டத்தில் அனைத்து ராசியினரும் சனிக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் ரேகைகளை குறைப்பதில் சிவபெருமானின் நந்தி வாகனமானது கீர்த்தி மிக்கது. பிரதோஷ நாட்களில் நந்தி அபிஷேகத்திற்கு பால், பழங்கள், பூக்கள் வாங்கி அளித்து சிறப்பு வழிபாடு செய்வது சிறந்தது.
Edit by Prasanth.K