அம்மனை நோக்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருப்பது வழக்கமானதாகும். குறிப்பாக, கோவில் விழாக்களில் பக்தர்கள் கடுமையான விரதம் மேற்கொள்கின்றனர். சபரிமலைக்கு செல்வோர் 48 நாட்கள், முருகன் கோவிலுக்கு செல்வோர் 40 நாட்களுக்கு மேல் விரதம் இருப்பது வழக்கம்.
ஆனால், உலக நன்மைக்காக அம்மனே விரதம் இருப்பது என்பது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு. இத்தலத்தில் அம்மனை வணங்கினால் அனைத்து சங்கடங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அம்மனுக்கு சாதாரண நைவேத்தியம் இருக்காது., துள்ளு மாவு, நீர்மோர், கரும்புச் சாறு, பானகம், இளநீர் மட்டுமே படைக்கப்படுகிறது.
இந்த காலங்களில் அம்மனின் முகம் சோர்வாக காணப்படும் என கூறப்படுகிறது. விரத முடிவில் பூச்சொரிதல் நடைபெறும். பக்தர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனை அலங்கரிப்பர். திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அலங்கார வாகனங்களில் ஊர்வலமாக பங்கேற்பர்.