சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் தினசரி பக்தர்கள் தரிசனம் 1 லட்சத்தை தொட்டுள்ளது.
மார்கழி மாதத்தில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடிக் கட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம் சபரிமலை யாத்திரை செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மண்டல பூஜைக்கு நடை திறக்கப்பட்டபோதே கூட்ட நெரிசலால் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில் தேவசம்போர்டு மற்றும் கேரள காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
அதையடுத்து ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் தரிசனத்திற்கு வந்து செல்லும் நிலையில் நேற்று பக்தர்கள் வருகை 1 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. மகரவிளக்கு ஏற்றும் அன்று இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி தரிசனத்திற்கு ஆன்லைன் வாயிலாக 80 ஆயிரம் பாஸ்களும், நேரடியாக 10 ஆயிரம் பாஸ்களும் வழங்கப்பட்டு வருகிறது.