இன்று ஆடி மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதியாகும். இந்த திதி, “ரக்ஷா பஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் ஸ்ரீ வராகி அம்மன் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், இரட்டிப்பு பலன்களை தரக்கூடியது என்றும் ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.
வராகி, சப்த கன்னிகளில் ஐந்தாவதாக இருப்பவள். இவள், வாழ்வின் பஞ்சங்களைத் தீர்க்கும் சக்தி கொண்டதால் “பஞ்சமி தாய்” என்று போற்றப்படுகிறாள்.
வராக மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவியவள் வராகி. பன்றிக்கு வானை நோக்கும் இயல்பு கிடையாது. அப்போது, பூமியை உயர்த்தும் உந்துதலுக்கு வராகி துணை நின்றாள். எனவே, இவள் "உந்துதலுக்கு உரிய தெய்வம்" என்று போற்றப்படுகிறாள்.
வராகி வழிபாடு, ஒருவரின் ஆன்மிக ஆற்றலான குண்டலினி சக்தியை மேலெழுப்ப உதவும். குண்டலினி மேலெழுந்தால், நினைத்த காரியங்கள் ஈடேறும், சொன்ன வார்த்தைகள் பலிக்கும். இந்த வழிபாடு எதிரிகளின் தொல்லையில் இருந்து காக்கும். வராகியின் சக்தியால் அன்பால் எதிரிகளை வெல்ல முடியும்.
வராகி வழிபாட்டிற்கு இரவு நேரம் சிறந்தது. இருள் கவ்விய மாலை வேளையில் வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.