முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் உள்ள பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா இந்த ஆண்டுக்கான காப்புக்கட்டுதலுடன் இன்று தொடங்கியது.
விழாவையொட்டி, கோயில் சுத்தப்படுத்தப்பட்டு, காலை 9 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா ஆரம்பமானது. அதை தொடர்ந்து, காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டும் நிகழ்வு நடந்தது.
நவராத்திரி விழாவின் முக்கிய பூஜைகள் கோவில் பட்டத்து குருக்கள்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணியன் மற்றும் பிற குருக்கள்களால் நடத்தப்பட்டன. விழாவின் பத்தாம் நாளான அக்டோபர் 1-ஆம் தேதி, பழனி முருகன் கோயிலில் உச்சிக்கால பூஜை மற்றும் சாயரட்சை பூஜை நடைபெறும்.
அதை தொடர்ந்து, பெரியநாயகி அம்மன் கோயிலிலிருந்து முத்துக்குமாரசுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் சென்று, அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சி முடிந்து, முத்துக்குமாரசுவாமி மீண்டும் பெரியநாயகி அம்மன் கோயிலுக்குத் திரும்புவார்.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.