பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்' என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம் என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.
வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம் எனப்படுகிறது. தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரதோஷத்தின் வகைகள்:
பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு. நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.
1. நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.
2. பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம் எனப்படும்.
3. மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம் எனப்படும்.
4. மகா பிரதோஷம்: சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம் எனப்படும்.
5. பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.