மகாபிரளயத்திற்கு பிறகு, பிரம்மன் தனது படைப்பு தொழிலை தொடங்கத் தவம் செய்த தலமே கும்பகோணம். சிவன் தந்த அமுதக்கலசம் இங்குத் தங்கியதால், இத்தல இறைவன் 'கும்பேஸ்வரர்' அல்லது 'ஆதிகும்பேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள லிங்கத் திருமேனி மணலால் ஆனது; இதை வணங்குவதால் அபாரமான ஞானமும் கல்வியும் மோட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்து இறைவி மங்களாம்பிகை, மங்கள நாயகி என்றும் போற்றப்படுகிறாள். இவர் சக்தி பீடங்களில் ஆதிபீடம் எனப்படும் மந்திர பீடத்தில் உறைகிறார். அம்பாளுக்கு 72,000 மந்திர சக்திகள் உரியதாக சொல்லப்படுகிறது. இந்த அம்மன் கேசாதி பாதம் வரை 51 சக்தி பாகங்களாகக் காட்சியளிப்பது தனிச்சிறப்பு.
இவ்வம்மையை அந்தி நேரத்தில் தரிசித்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும். இக்கோயில் அப்பர், திருஞான சம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்பெற்ற காவிரிக்கரைத் தலமாகும். இதன் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது.