கோகுலாஷ்டமி குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடியது. தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. அவர் பிறந்த புண்ணிய தினமே கோகுலாஷ்டமி தினமாகும். கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தார்.
பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பூலோகத்தில் வந்து பிறந்தநாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால், என்றைக்கு அஷ்டமி நள்ளிரவில் வருகிறதோ அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
கோகுலாஷ்டமி நாளன்று வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை அரிசி மாவை நீரில் கரைத்து அந்த மாவை கொண்டு சிறு குழந்தையின் காலை வரைவதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவதாக பொருள்.
கோகுலாஷ்டமி தினத்தன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.
அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோசித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி காட்டுவதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம். கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தைக் கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று வாழ்வில் வளம் பெறுவோம்.