தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சுவாமி திருக்கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். தென்னக திருப்பதி என்று போற்றப்படும் இத்தலத்தில், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 12 நாள்கள் பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா மார்ச் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் உற்சவர் பொன்னப்பன், பூமிதேவி அலங்கரிக்கப்பட்டு வீதி உலா சென்றனர். விழாவின் முக்கியமான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர்கள் எழுந்தருள, பக்தர்கள் உற்சாகமாக தேரை இழுத்தனர். கோவில் யானை பூமா முன் சென்றது. நாட்டியக் குதிரை, செண்டை மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்தன. தேர் ஊர்வலம் முடிந்ததும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.