முருகப்பெருமானுக்கு புனிதமான பங்குனி உத்திரம் திருநாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் உள்ள அறுபடை வீடுகளில் பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். திருமணத் தடைகள் அகலும் என்ற நம்பிக்கையுடன், பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடுகளைச் செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டவுடன், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி மூலஸ்தான தரிசனம் தடை செய்யப்பட்டதால், சண்முகர் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவரை பக்தர்கள் வழிபட்டனர். சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது.
சுவாமிமலை கோயிலிலும் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து, மலர் அலங்காரத்தில் தரிசனம் செய்தனர். வயலூர் கோயிலில் பக்தர்கள் காவடி, பால்குடம் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்றிரவு 9 மணிக்கு முருகன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும். 15ம் தேதி ஸ்ரீவள்ளி திருக்கல்யாணம் மிதுன லக்னத்தில் நடைபெற உள்ளது.