அதிக வேலை, நீடித்த மன அழுத்தம், காய்ச்சல் ஆகியவற்றுக்கு பிறகு உடல் சோர்வாக இருப்பது சாதாரணமானது. ஆனால், அதிக வேலை இல்லாமலேயே காலை எழுந்தவுடன் உடலில் சோர்வு தென்படுமானால், அது ஒரு எச்சரிக்கையான அறிகுறி ஆகும்.
இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உறக்கமின்மை இருக்கிறது. நல்ல உறக்கமின்றி, அதிக நேரம் தூங்கினாலும், தூக்கத்தில் குழப்பம் இருந்தால், உடல் சரியாக ஓய்வெடுக்காது. குறிப்பாக குறட்டை விடுவது, காற்றோட்டமில்லாத அறையில் தூங்குவது போன்றவை நம்மை சோர்வடையச் செய்யும்.
தூக்கத்துடன் சேர்த்து, தைராய்டு சுரப்பி செயலிழப்பும் முக்கியமான காரணமாக இருக்கலாம். இதன் ஆரம்ப அறிகுறிகளில் உடல் சோர்வும், மன அழுத்தமும் அடங்கும். சரியான பரிசோதனை மூலம் இதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம்.
சர்க்கரை நோய், ரத்த சோகை மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவையும் காலை நேர சோர்விற்கு காரணமாக இருக்கக்கூடும். குறிப்பாக, ரத்தசோகை உள்ளவர்கள் எளிதாக சோர்ந்து போவார்கள்.
காலையில் தொடர்ந்து சோர்வாகவே இருப்பவர்கள், 10 நாட்களுக்கும் மேல் இந்த நிலை தொடருமானால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம்.
சாதாரணமாக இருந்தாலும், சத்துள்ள உணவு, போதுமான தூக்கம், தினசரி நடைபயிற்சி போன்றவையும் உடல் சோர்வை குறைக்கும் முக்கிய வழிகளாக இருக்கலாம்.