மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.
மஞ்சளின் கிழங்குகள், பளிச்சிடும் மஞ்சள் நிறமானவை நறுமணமுள்ளவை. உலர்ந்த கிழங்குகளே மருத்துவப் பயன் கொண்டவை. இவை மஞ்சள் என்கிற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள்பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூசவேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு சிகிச்சையை தொடர அவை குணமாகும்.
மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.
ஒரு துண்டு மஞ்சளைச் சுண்ணாம்பு தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். அல்லது ஒரு டம்ளர் பாலில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் கலந்து காலை மாலை குடித்து வர வறட்டு இருமலுடன் வரும் காய்ச்சல் குணமாகும்.
மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும். இது ஒரு பாரம்பரிய முறையாக நமது மருத்துவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.
மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊறவைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி அரை மணிநேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல் வெப்பம் குறையும்.