தினம்தோறும் கடைகளிலும், சந்தைகளிலும் காய்கறிகள் வாங்கும்போது கொஞ்சம் கொத்தமல்லி தழையை கொடுப்பார்கள். காசில்லாமல் இனாமாக கிடைக்கும் கொத்தமல்லி தழையை உணவில் வாசத்திற்காக சேர்ப்பதாய் நாமும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் காலத்திற்கும் நம்மை ஆரோக்யமாக வாழ வழி செய்யக்கூடியவை.
கொத்தமல்லி கீரை வகையை சார்ந்தது. இதை வீட்டு தோட்டங்களிலும், சிறு தொட்டிகளிலும் கூட எளிதாக வளர்க்கலாம்.
கொத்தமல்லி கீரை உஷ்ணம், குளிர்ச்சி இரண்டு தன்மைகளையும் கொண்டது. வெயில் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பத்தையும் தரக்கூடியது.
காய்ச்சல் நேரங்களில் கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொத்தமல்லி சாதம் அல்லது கொத்தமல்லி ரசம் என சாப்பிட்டால் காய்ச்சல் உடனடியாக குணமாகும்.
கொத்தமல்லிக்கு பசியை தூண்டும் சக்தி உண்டு. பசியெடுக்காத பிரச்சினை இருந்தால் உணவு உண்ணுவதற்கு ஒரு மணி நேரம் முன் கொத்தமல்லி சூப் வைத்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
கொத்தமல்லி ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம் குணமாகும். உடல் பலம் பெறும்.
கொத்தமல்லியை எண்ணெய்விட்டு சிறிது வதக்கி கட்டிகள், வீக்கங்கள் மீது வைத்து கட்டினால் விரைவில் குணமாகும்.
கொத்தமல்லி கீரையை துவையல் செய்தும் சாப்பிடலாம். இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் பிரச்சினைகள் குணமடையும்.
தொடந்து கொத்தமல்லி சாப்பிட்டு வந்தால் முதுமையில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் உடல் பொலிவாக இருக்கும்.
கடைகளில் 5 ரூபாய்க்கு வாங்கும் கொத்தமல்லியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது பார்த்தீர்களா? கொத்தமல்லியின் பயன்களை அனைவருக்கும் சொல்வோம். ஆரோக்கியமாக வாழ்வோம்