மூல நோய் என்பது மருத்துவ மொழியில் "ஹெமராய்ட்ஸ்" என அழைக்கப்படுகிறது. பெருங்குடலின் இறுதிப்பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் அழுத்தம் காரணமாக வீங்கி வலியை ஏற்படுத்துவது இந்த நோயின் தன்மையாகும். இது ஆசனவாயின் உள்ளே ஏற்படுமானால் "உள்மூலம்", வெளியே தோன்றினால் "வெளிமூலம்" என வகைப்படுத்தப்படுகிறது.
நாள்பட்ட மலச்சிக்கல், உடலின் அதிக வெப்பம், குடல் இயக்கத்தின் மந்தம், நீர் குறைவாக குடிப்பது, உடல்பருமன், நீண்ட நேரம் அமர்ந்து இருப்பது போன்றவை இதற்குக் காரணமாகின்றன. பெண்களில், கர்ப்பகாலத்தில் வயிறு அழுத்தம் காரணமாகவும் ஏற்படக்கூடும்.
அடிக்கடி ஆசனவாயில் இருந்து ரத்தம் சிந்துதல், எடை குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும் போது அதை அலட்சியமாக நினைக்கக் கூடாது. உணவில் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் — வாழைத்தண்டு, பீர்க்கங்காய், பீன்ஸ், பசலைக்கீரை போன்றவை அடிக்கடி சேர்க்க வேண்டும்.
மூல நோய்க்கு இயற்கை நிவாரணங்களாக, துத்திக் கீரை, சிறுவெங்காயம், விளக்கெண்ணெய் சேர்த்து பருப்புடன் கலந்து சாப்பிடலாம். கருணைக்கிழங்கை குழம்பாக வாரத்தில் இரண்டு முறை எடுத்துக்கொள்ளலாம். பிரண்டை, முள்ளங்கி போன்றவை சூப்பாக செய்து அருந்தலாம்.
மருந்துகள் பலனளிக்காத பட்சத்தில், பாரம்பரிய சித்த மருத்துவ முறையான காரநூல் சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காணலாம். இது பாதிக்கப்பட்ட பகுதியை ஊசி போல நூலால் கட்டி, பக்க விளைவுகள் இல்லாமல் நோயை நீக்கும் புனித முறை என கருதப்படுகிறது.