நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட நன்னாரி வேர், வெளிநாட்டினருக்கு எளிதில் கிடைக்காத அரிய பொக்கிஷம். ஆனால், தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும் இந்த அற்புத மூலிகையை நம்மில் பலர் அதன் அருமை தெரியாமல் பயன்படுத்துவதில்லை. அன்றாடம் நாம் பயன்படுத்த வேண்டிய மூலிகைகளில் இது மிகவும் முக்கியமான ஒன்று.
கொடி வகையைச் சேர்ந்த நன்னாரியின் வேர், சித்த, ஆயுர்வேத, மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நன்னாரி வேரை நீரில் போட்டுவைத்து, அந்த நீரை குடித்து வந்தால், உடல் வெப்பம் சமநிலைப்படும். இது குடிப்பதற்கு இதமாக இருப்பதுடன், சிறுநீர் போக்கை அதிகரித்து, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.
கோடைக்காலம் வந்துவிட்டால் ஏற்படும் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக சிறந்தது. இது உடலின் உள் வெப்பத்தைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரைக் கட்டி போட்டுவிட்டு, அந்த நீரைக் குடித்து வந்தால் உடல் நன்கு குளிர்ச்சி பெறும்.