திருவையாறு ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட்சமாக, சுமார் 350 ஆண்டுகளாக வன்னிமரம் உயரமாக காட்சி அளிக்கிறது. கோபுரத்தைப் போல் நிமிர்ந்த இந்த மரம், எந்த தடையும் இல்லாமல் வளரும் வகையில், சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
வன்னி இலைகள் விநாயகர், முருகன், சிவபெருமான் மற்றும் சனீஸ்வர பகவானுக்குப் பொருத்தமான பூஜை இலைகளாக விளங்குகின்றன. இந்த மரம், மருத்துவ ரீதியாகவும் பலனளிக்கும் மூலிகையாகும்.
பொதுவாக சிவன் கோவில்களில் வில்வமரம் முக்கியமாக காணப்படும் நிலையில், இங்கு வன்னி மரம் முக்கிய மரமாக இருக்கிறது. இந்த மரத்தை வணங்கினால் பாவங்கள் நீங்கும் எனப் புராணங்கள் கூறுகின்றன. கைகூப்பி தொழுது வலம் வந்தால்கூட தீவினைகள் விலகும் என விநாயகர் புராணம் விளக்குகிறது.
இம்மரத்தின் அடியில் ஒரு முனிவர் தவம் செய்ததாகவும், அந்த தவமூலம் முனீஸ்வரர் இங்கு தங்கியுள்ளதாக பெரியோர்கள் கூறுகின்றனர்.
வாரம்தோறும் இந்த மரத்தை வலம் வருபவர்கள், தங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது.
அனைத்து நோய்களுக்கும் மருந்தாகச் செயல்படும் வன்னி மரத்தை இறைவனைப் போல் நம்பிக்கையுடன் வணங்கினால், வாழ்க்கையில் நன்மைகள் சூழும் என பக்தர்கள் கூறுகின்றனர்.