சுற்றுச்சூழலில் இருந்து மனித உடலுக்குள் நுழையும் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோபிளாஸ்டிக் போன்ற மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இரத்த நாளங்களில் படிவதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தாலியின் காம்பானியா லுய்கி வான்விடெல்லி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கழுத்தில் மூளைக்குச் செல்லும் கரோடிட் தமனியில் அடைப்பை நீக்க அறுவைசிகிச்சை செய்த 257 நோயாளிகள் உட்படுத்தப்பட்டனர்.
அவர்களின் தமனிகளிலிருந்து அகற்றப்பட்ட கொழுப்புப் படலங்களில் பாலிவினைல் குளோரைடு உள்ளிட்ட நுண்பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பிளாஸ்டிக் துகள்கள் இருந்தவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம் அல்லது மரணம் ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட 4.5 மடங்கு அதிகமாக இருந்தது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வு, பிளாஸ்டிக் துகள்கள் இதய ஆரோக்கியத்தை நேரடியாக அச்சுறுத்துவதைச் சுட்டிக்காட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.