மருத்துவ உலகம் கருவாடை குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்தும் ஒரு சிறந்த உணவாகக் குறிப்பிடுகிறது. பல்வேறு வகையான கருவாடுகளில், தனித்துவமானது மாசி கருவாடு. கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்ற சூரை மீன்கள், மாசி கருவாடாக மாற்றப்படும்.
பொதுவாக, மீன்களை கருவாடாக உருவாக்க, அவற்றை சுத்தம் செய்து உப்பு தடவி வெயிலில் காயவைக்கின்றனர். ஆனால், சூரை மீன்கள், வேறுபட்ட முறையில் அவித்து, பிறகு காயவைத்து தயாரிக்கப்படுகின்றன. இந்த செயல்முறையின் விளைவாக, மீனின் நிறம் அழகிய சிவப்பு பளபளப்பாக மாறி, கண்ணாடி போன்ற தோற்றம் பெறுகிறது.
மாசி கருவாடு உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கி, தசைகள் மற்றும் உடல் உறுப்புகளை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாக அறியப்படுகிறது. முன்னோர்களின் வழக்கப்படி, திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாசி கருவாடு உணவாக வழங்குவது வழக்கமாக இருந்தது.
பாரம்பரிய வைத்தியத்தின்படி, மாசி கருவாடு பெண்களுக்குப் பெரும் பலனளிக்கிறது. இதை உணவில் சேர்ப்பதன் மூலம், சினைப்பை மற்றும் கருப்பை வலுவடைய உதவுவதாக கூறப்படுகிறது. மேலும், உடலின் வாத, பித்த, கபத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
திருமணமான ஆண்களுக்கு மாசி கருவாடு வழங்குவதால், இனப்பெருக்க உறுப்புகள் பலமாக, ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் என நம்பப்படுகிறது.