சாதாரணமாக, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சிறுநீர் வெளிவரும் போது அது மஞ்சள் கலந்த வெளிறிய நிறத்துடன், நுரையில்லாமல் இருப்பது இயல்பானது. ஒருவேளை ஒரே ஒரு முறையாவது சிறுநீரில் சிறிது நுரை காணப்பட்டால் அதற்கு பதட்டப்பட தேவையில்லை. ஆனால், தினமும், அல்லது பெரும்பாலான நேரங்களில் சிறுநீர் நுரைநுரையாக வெளிவந்தால் அதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக, உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, அல்லது சிறுநீரில் அதிக அளவு புரதம் கலந்து வெளியாவது காரணமாக இருக்கலாம். சில நேரங்களில், சிறுநீரக சிக்கல்கள், நீண்ட நாள் சர்க்கரை நோய், கல்லீரல் பிரச்சனைகள், புராஸ்டேட் சுரப்பி தொடர்பான பிரச்சனைகள், அல்லது உயர் ரத்த அழுத்தத்திற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மேலும், கை, கால், முகம் வீக்கம், உடல் நலம் குறைதல், பசியின்மை, வாந்தி, தூக்கமின்மை, சிறுநீரின் அளவில் மாற்றங்கள் போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
இது போன்ற மாற்றங்களை கண்டறிய, சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனைகள், சிறுநீரக ஸ்கேன் ஆகியவை பயனுள்ளதாக இருக்கும். தீர்வுக்காக தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்தல், சத்தான உணவு, உப்பு மற்றும் புரத அளவை சமநிலையில் வைத்தல் போன்றவை முக்கியம்.
நுரை வந்ததாலே பெரும் பதட்டம் வேண்டாம். சமநிலை வாழ்கை முறையுடன் மருத்துவர் ஆலோசனையை பெறுவது போதும்.