Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்னிந்தியாவில் முதல்முறை! இளைஞருக்கு பெருந்தமனி வால்வு அடைப்பு சிகிச்சை வெற்றி!

Advertiesment
SIMS
, புதன், 8 அக்டோபர் 2025 (11:14 IST)

தென்னிந்தியாவில் முதன் முறையாக பளிங்கு (கால்சியம் படிந்த) பெருந்தமனி மற்றும் பெருந்தமனி வால்வில் அடைப்பிருந்த இளைஞருக்கு சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

 

 

 

·       30 வயதிற்கு கீழ்ப்பட்ட நோயாளிகளில் பளிங்கு (கால்சியம் படிந்த) பெருந்தமனி மற்றும் பெருந்தமனி வால்வில் அடைப்பு ஆகியவற்றின் கலவை கண்டறியப்படுவது மிகவும் அரிதாகும்

 

·       ஏறக்குறைய ஒரு முட்டைப்போல எளிதில் உடையக்கூடிய அதிக கால்சியம் படிந்த வால்வில் ஒட்டுவதும், தையலிடுவதும் மிக கடினமானது; அதிக ஆபத்து வாய்ந்ததும் கூட.

 

 

 

சென்னை, அக்டோபர் 07, 2025: ஒரு அரிதான, உயிருக்கு அதிக ஆபத்தான இதய பாதிப்பால் அவதிப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 28 வயதான பொறியியல் துறை மாணவரின் உயிரை ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ சாதனையாக சிம்ஸ் மருத்துவமனையின் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கின்றனர். 

 

 

 

இரு மாதங்களாக கடுமையான சுவாசப் பிரச்சனைகள் இந்த இளைஞருக்கு இருந்திருக்கின்றன.  கேரளாவில் பல மருத்துவமனைகளுக்கு சென்றபோது பளிங்கு பெருந்தமனி (கடுமையாக இறுகி, கடினமான மற்றும் எளிதில் நொறுங்கக்கூடிய முக்கிய இரத்தக்குழாய்) மற்றும் “ஒடுங்கிய பெருந்தமனி வால்வு” (இதயத்திலிருந்து இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற வால்வு குறுகியிருப்பது) என்ற இரண்டு கடுமையான இதயப் பிரச்சனைகள் அரிதாக ஒருங்கிணைந்திருப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டன.  இதற்கான அறுவைசிகிச்சையின் சிக்கலான தன்மை மற்றும் உயிருக்கு அதிக ஆபத்துக்கான வாய்ப்பின் காரணமாக, கேரளாவின் உள்ளூர் மருத்துவமனைகள் அறுவைசிகிச்சையை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தன.

 

 

 

இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத இந்த இளம் நோயாளி, சென்னையின் சிம்ஸ் மருத்துவமனையில் பெருந்தமனியில் இரத்தநாள அழற்சிக்கான சிகிச்சை மையத்திற்கு வருகை தந்தார்.  இங்கு பணியாற்றும் நிபுணத்துவம் மிக்க இதய அறுவைசிகிச்சை மருத்துவர்களின் குழு, நம்பிக்கையோடும், தைரியத்தோடும் இந்த சவாலை எதிர்கொள்ள முடிவு செய்தது.  மிக அதிகமாக கால்சியம் படிந்த பெருந்தமனி மீது தான், பெருந்தமனி வால்வு இருக்கிறது.  கால்சியம் படிந்த கடினமான பெருந்தமனியில் தையலிடும் அசாதாரண சவாலை எதிர்கொண்ட நிபுணர்களின் குழு ஒரு மெக்கானிக்கல் பெருந்தமனி வால்வு மாற்றும் செயல்முறையை திறம்பட மேற்கொண்டது.  பளிங்கு பெருந்தமனி என்ற நிலையானது, தூளாக நொறுங்கக்கூடியதால், அதில் அறுவைசிகிச்சை செய்வது சிரமமானதாகவும், அதிக சவாலானதாகவும்  இருப்பதால் இந்த இளைஞருக்கான சிகிச்சை அதிக ஆபத்தானதாகவே இருந்தது. 

 

 

 

ஐந்து மணி நேரங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை, இதய மற்றும் பெருந்தமனி நோய்களுக்கான சிகிச்சை மையத்தின் இயக்குனரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். வி.வி. பாஷி மற்றும் இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். முகமது இத்ரீஸ் ஆகியோர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.  உணர்விழப்பு மருந்தியல் நிபுணர்களான இதய மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அஜு ஜேக்கப், மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர். ஏ. அருண்குமார் ஆகியோரின் சிறப்பான ஆதரவோடு செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் குழுவின் பங்களிப்பும் இந்த சிகிச்சையின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.

 

 

 

டாக்டர். பாஷி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “உடலின் மிகப்பெரிய தமனியான பெருந்தமனி, இதயத்திலிருந்து ஆக்சிஜன் செறிவான இரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது.  பெருந்தமனி வால்வு, சீரான இரத்த ஓட்டத்தையும் உறுதி செய்வதுடன், இரத்தம் பின்னோக்கிப் பாய்வதை தடுக்கிறது.  இந்த இளம் நோயாளிக்கு இந்த வால்வு மிக கடுமையாக சுருங்கி ஒடுங்கியிருந்தது; பெருந்தமனியும், அதிக கால்சியம் படிந்து பளிங்கு போல ஆகியிருந்தது.  ஒடுங்கிய பெருந்தமனி வால்வு மற்றும் பளிங்குபோல் கால்சியம் படிந்த பெருந்தமனி ஆகியவற்றின் இரட்டை இடர்வாய்ப்பின் காரணமாக, இது அதிக சிக்கலான பாதிப்பாக இருந்தது.  இளவயது நபர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது.  பெருந்தமனி வால்வு ஒடுக்கம் என்பது, வயது முதிர்ந்த நபர்களில் பொதுவானது. பல ஆண்டுகளாக கால்சியம் படிப்படியாக படிவதன் காரணமாக இந்த பாதிப்பு வழக்கமாக உருவாகும்.  ஆனால், 30 வயதிற்கு கீழ்ப்பட்ட ஒரு நபருக்கு இது இருப்பது உண்மையிலேயே மிக அரிது.  அதைப் போலவே, பளிங்கு பெருந்தமனி என்பதும், இளவயது நோயாளிகளிடம் கண்டறியப்படுவது மிக அசாதாரணமானது.  இயல்பான இதய இயக்கத்தை திரும்ப கொண்டு வரும் அதே வேளையில், நோயாளியின் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக எமது குழுவினர், ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளை மிக கவனமாக மதிப்பாய்வு செய்து சிகிச்சை திட்டத்தை துல்லியமாக வகுத்து அதனை செயல்படுத்தினர்.” என்று கூறினார்.

 

 

 

இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். முகமது இத்ரீஸ் பேசுகையில், “இந்நோயாளிக்கு ஒரு மெக்கானிக்கல் வால்வு மாற்றும் செயல்முறையை செய்வது அவசியமாக இருந்தது.  இதில் பெருந்தமனி வால்வு மற்றும் பெருந்தமனி ஆகிய இரண்டிலும் தையல் போடுவது தேவைப்படும். இருப்பினும், பளிங்கு போன்ற பெருந்தமனியானது, அதிக கால்சியம் படிந்திருந்ததால் அதன் சுவர்கள் ஒரு முட்டை ஓடு போல எளிதில் உடையக்கூடியதாக இருந்தன.  கால்சியம் படிந்த இத்தகைய திசுவை வெட்டுவது அல்லது தையல் போடுவதில் கணிசமான ஆபத்துகள் இருக்கின்றன.  கால்சியத்தின் சிறு துகள்கள் உடைந்து வெளியே இரத்த ஓட்டத்திற்குள் நுழையுமானால், பக்கவாதம் அல்லது பிற கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டு விடும்.  தையலிடும் செயல்முறை தொழில்நுட்ப ரீதியாக வெற்றிகரமாக இருந்தால் கூட, இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு அதிக இடர்வாய்ப்பு இருக்கும்.  இந்த நுட்பமான சவால்களின் காரணமாக, இந்த அறுவைசிகிச்சை அதிக ஆபத்தானது என்று கருதிய கேரளாவின் இரண்டு முக்கிய மருத்துவமனைகள் இந்த அறுவைசிகிச்சையை தவிர்த்தன.  சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள எமது குழு, கவனமாக திட்டமிடல் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இடர்வாய்ப்புகளை குறைப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த பிறகு மிக துல்லியமாக இந்த மருத்துவ செயல்முறையை மேற்கொண்டது.  சிகிச்சைக்குப் பிறகு இந்த இளம் நோயாளி இப்போது நன்றாக மீண்டு குணமடைந்து வருகிறார். அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய முறையான பராமரிப்போடு, இயல்பான வாழ்க்கையை இவர் வாழ்வாரென்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார்.

 

 

 

சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து, இச்சாதனை நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கையில், “எமது அறுவைசிகிச்சை நிபுணர்களது குழுவின் இச்சாதனை, மருத்துவ செயல்தளத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றே கருதப்படுகிறது.  இந்த சிக்கலான சவால் நிறைந்த அறுவைசிகிச்சைக்கு மிக அதிக திறன் தேவையாக இருந்தது.  ஏறக்குறைய ஒரு ‘முட்டை ஓடு’ போன்று கால்சியம் படிந்த பெருந்தமனி வால்வு மற்றும் பளிங்கு போன்று மாறிய பெருந்தமனி ஆகிய மிக அரிதான இரு ஆபத்தான நிலைகளின் கலவையை கொண்டிருந்த 28 வயதான இந்த நோயாளிக்கு வெற்றிகர அறுவைசிகிச்சையை செய்திருப்பது, நிச்சயமாக பெருமிதம் அடையக்கூடிய சிறந்த சாதனையாகும்.  அதிக சிக்கலான இதய பாதிப்பு சூழல்களில் , எமது அறுவைசிகிச்சை நிபுணர்களின் நிபுணத்துவம், விடாமுயற்சி மற்றும் சமயோஜித திறன் ஆகியவை இந்த இளம் நோயாளியின் உயிரை காப்பாற்றியிருக்கிறது; அதே வேளையில், இதய சிகிச்சை உத்திகளின் ஒரு புதிய தர அளவுகோலை உருவாக்கியிருக்கிறது.  சிம்ஸ் மருத்துவமனையின் நோயாளிகளின் நலவாழ்வு மீது நாங்கள் கொண்டிருக்கின்ற அர்ப்பணிப்பிற்கும், நிபுணத்துவம் மிக்க உயர் சிகிச்சைக்கும் ஒரு புதிய அர்த்தத்தை இந்த மருத்துவ சாதனை தந்திருக்கிறது.” என்று கூறினார்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகுமா? உண்மை என்ன?