உடற்பயிற்சி செய்து, சரியான உடல் நிறை குறியீடு கொண்டவர்களுக்கு கூட, கொழுப்பு நிறைந்த கல்லீரல் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக, அதிக எடை கொண்டவர்களை காட்டிலும், இயல்பான அளவை விட உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கே இந்த சுகாதார அபாயம் கூடுதலாக இருக்கிறது. உடல் தோற்றம் மட்டுமே ஆரோக்கியத்தின் அளவுகோல் அல்ல.
இந்தியாவில், மரபணு அமைப்பின் காரணமாக, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளின் உடல், கிடைக்கும் அனைத்து கலோரிகளையும் சேமிக்க பழகி கொள்கிறது. இந்த சேமிப்பு, வெளியில் கொழுப்பாக தெரியாமல், உள் உறுப்புகளை சுற்றிலும் குறிப்பாக கல்லீரல் மற்றும் கணையம் படிய தொடங்குகிறது.
இவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது, கொழுப்பு நேரடியாக உறுப்புகளை சுற்றிலும் படிந்து, இளம் வயதிலேயே இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்பட காரணமாகிறது.
எனவே, வெளிப்புற தோற்றத்தை மட்டும் நம்பாமல், கர்ப்ப காலம் முதல் குழந்தைகளுக்கு சரிவிகித சத்துணவு வழங்குவது, அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது ஆகியவை மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது அவசியம்.