கொரோனா காலக்கட்டத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் Work From Home முறை நடைமுறையில் உள்ளது. இவ்வாறு பணியாளர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்ப்பதால் அலுவலக பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் குறைவதால் பல நிறுவனங்கள் இந்த வசதியை ஆதரிக்கின்றன.
ஆனால் இவ்வாறு வீட்டிலிருந்தே பணி செய்பவர்களின் மனநிலை, அலுவலகம் சென்று பணிபுரிபவர்களின் மனநிலையை விட மோசமடைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த சேப்பியன் லேப்ஸ் ஆய்வு நிறுவனம் 65 நாடுகளை சேர்ந்த 54 ஆயிரம் ஊழியர்களிடையே ஆய்வுகளை மேற்கொண்டது.
அதில் வீடுகளில் இருந்து பணிபுரிவதால் சக ஊழியர்களோடு உறவு நிலை மேம்படாமல் இருப்பது, தனிமையில் இருப்பது, வீட்டிலிருந்து பணி செய்வதால் வேலை நேரத்தை தாண்டி பணி செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை விட அலுவலக பணியாளர்களின் மன ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதாகவும், அதற்கு காரணம் சக ஊழியர்களுடனான நேரடி தொடர்பு மற்றும் தனிமையில் இருந்து விடுபட்டிருத்தல் ஆகியவையே என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
Edit by Prasanth.K