2019ம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் லண்டனில் மே 30ம் தேதி கோலாகலமாக தொடங்கின. ரசிகர்களும் ஆர்வமாக கிரிக்கெட் தொடரை காண தொடங்கினர். ஆனால் இன்று ஆர்வம் போய் அயற்சியே கிடைத்திருக்கிறது ரசிகர்களுக்கு.
விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து ரத்து செய்து வருவதே இதற்கு காரணம். மழை காரணமாக ரத்து செய்யப்பட்டாலும் விளையாட வேண்டிய அணிகளுக்கு விளையாடாமலே தலா ஒரு புள்ளிகளை கொடுத்து விடுகின்றனர். நாள் முழுக்க விளையாடி புள்ளிகள் பெற்றவர்களுக்கு நிகராக விளையாடாத அணிகளும் பட்டியலில் வரும்போது ரசிகர்கள் கோபம் அதிகமாகிறது.
உதாரணத்திற்கு இலங்கை அணி விளையாடிய இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்தன. மீத இரண்டு போட்டிகள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட இரண்டு போட்டிகளுக்கும் இரண்டு புள்ளிகள் பெற்று மொத்தமாக நான்கு புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. ரத்து செய்யப்பட்ட இரண்டு ஆட்டங்களையும் இலங்கை விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்குமா என்பதை உறுதியாக சொல்லமுடியாது.
இப்படியாக விளையாடாத அணிகள் கூட அதிக புள்ளிகளை பெற்று அட்டவணையில் வந்துவிடுகிறது. உலக கோப்பை போட்டிதான் நடக்கிறதா? அல்லது வெறும் பாயிண்ட்ஸ் பகிர்ந்தளிப்பு நடக்கிறதா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் இந்த வருட உலக கோப்பையை சுவாரஸ்யமற்றதாக ஆக்கிவிட்டதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.