Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுவராஜ் சிங் – வெற்றிவீரனின் வரலாற்று சுருக்கம்

யுவராஜ் சிங் – வெற்றிவீரனின் வரலாற்று சுருக்கம்
, திங்கள், 10 ஜூன் 2019 (16:13 IST)
2007ம் ஆண்டு செப்டம்பர் 19. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்குமான டி20 கிரிக்கெட் தொடர் மும்முரமாக போய்க்கொண்டிருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்தியா 16வது ஓவரில் தடுமாறி நின்று கொண்டிருந்தது. நம்பிக்கை நாயகன் தோனியும் கூட அன்று அவ்வளவு சிறப்பாய் ஆடவில்லை. அப்போதுதான் அவர் களமிறங்கினார். அன்று அப்படி ஒரு வரலாறு காணாத சம்பவம் நடக்கபோவதை யாருமே அறிந்திருக்கவில்லை.

கிட்டதட்ட ஆட்டம் முடிய போகிறது. 19வது ஓவர் முதல் பந்து வேகமாக வருகிறது. அவர் அடித்து விளாசினார் அது சிக்ஸர். இரண்டாவது பந்தை அடித்து விளாசுகிறார். அதுவும் சிக்ஸர். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பந்துகள். பந்துகள் வீசப்பட்ட வேகத்தில் மைதானத்தை தாண்டி ரசிகர்களிடம் சென்று விழுகின்றன. இந்திய அணி, இங்கிலாந்து அணி, ரசிகர்கள், வர்ணனையாளர் உட்பட மொத்த உலகமுமே பிரமித்து வாயடைத்து நின்றது. 19வது ஓவரின் கடைசி பந்து மீண்டும் கோட்டை தாண்டி, கேட்டை தாண்டி ரசிகளிடம் சென்று சேர்கிறது. வெறும் 16 பந்துகளில் 58 ரன்கள். 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள். அவர்தான் அன்றைய நாளின் ஆட்ட நாயகன். உலகமே அதிசயித்து பார்த்த அந்த நாயகன்தான் யுவராஜ் சிங்.

1981ல் சண்டிகரிலே யோகராஜ் சிங்கிற்கு மகனாக பிறந்தவர் யுவராஜ் சிங். இளமையிலேயே டென்னிஸ் மீதும், ஸ்கேட்டிங் மீதும் ஆர்வமாய் இருந்த யுவராஜை கிரிக்கெட் பக்கம் திருப்பிவிட்டதே அவரது அப்பா யோகராஜ் சிங்தான்.
webdunia

பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்தில் விளையாடிய யுவராஜ் சிங் 1999-2000 ராஞ்சி கோப்பை போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவரது அபாரமான திறமையை கண்ட தேசிய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவரை தேர்வு செய்தது.

யுவராஜுக்கு மிகப்பெரிய ரசிகர்களை ஏற்படுத்தியது, அவரை மிகப்பெரிய நட்சத்திர வீரராக மாற்றியது 2002 ல் நடைபெற்ற NatWest Sriesதான். அபாரமாக ஆடிய யுவராஜ் சிங் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மாறினார். கிரிக்கெட் கவுன்சிலுக்கு யுவராஜ் ஜொலிக்கும் தங்கமாக மாறிபோனார்.
webdunia

யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல் யுவராஜுக்கும் கடுமையான காலங்கள் உருவாகின. Natwest தொடருக்கு பிறகு அவர் ஆடிய பல ஆட்டங்களில் 20 ரன்கள் கூட எடுக்காமல் தோல்வியடைந்தார். 2003ல் நடந்த ஐசிசி உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் தோல்வியடைந்த கதையும் உண்டு. ஆனால் யுவராஜ் நம்பிக்கை இழக்கவில்லை. தொடர்ந்து பயிற்சி செய்தார்.

2005 ஆம் ஆண்டு யுவராஜின் முழுவேகத்தை ரசிகர்கள் முதன்முறையாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியன் ஆயில் கப் ஆட்டத்தில் தனது முழு திறமையை வெளிப்படுத்திய யுவராஜ் சிங் நான்கு ஆட்டங்களில் மொத்தம் பெற்ற ரன்கள் 192. அதற்கு பிறகு விளையாடிய பல ஆட்டங்களிலும் தனது ரன் 40க்கும் குறையாமல் இருக்கும்படி விளையாடினார்.
webdunia

2007ல் முதன்முறையாக இந்திய அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் யுவராஜ் சிங். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. உலக டி20 கோப்பையில் இங்கிலாந்துடன் மோதியது இந்தியா. 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசி தள்ளிய யுவராஜ் 12 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அன்றைய மேட்ச்சின் ஆட்ட நாயகனாக யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவருக்கு ரசிகர்கள் வைத்த செல்ல பெயர்தான் “யுவி”.

அதற்கு பிறகு 2011ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்றது. மொத்தமாக 4 அரைசதங்களை வீழ்த்தி 362 ரன் எடுத்து அந்த உலக கோப்பையின் ஆட்டநாயகன் விருதை வென்றார் யுவராஜ் சிங்.

உலக சாம்பியனாக வலம் வந்தவரை மீண்டும் சறுக்கல்கள் சந்தித்தன. இந்த முறை புற்றுநோய். இதை கேட்டதும் இந்திய ரசிகர்கள் கிடுகிடுத்து போனார்கள். 2011 உலக கோப்பைக்கு பிறகு புற்றுநோய் தாக்கத்தால் தற்காலிகமாக அவர் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டியதாய் போயிற்று. யுவராஜ் இல்லாத இந்திய கிரிக்கெட்டை ரசிகர்களால் மட்டுமல்ல, யுவராஜின் உற்ற நண்பர்களான கவுதம் கம்பீர், சேவாக் போன்றோரால் கூட நினைத்து பார்க்கமுடியவில்லை.
webdunia

உடல் நலமாகி திரும்ப வந்த யுவராஜ் சிங்குக்கு 50 ஓவர் கொண்ட பெரிய ஆட்டங்கள் விளையாட சிரமமானதாக இருந்தது. ஐபில் டி20 போன்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்த தொடங்கினார். தொடர்ந்து பஞ்சாப் அணியில் விளையாடியவர். புனே, பெங்களூர்,டெல்லி அணிகளோடும் இணைந்து விளையாடினார். கடைசியாக இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். ஆரம்ப போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை கொடுத்தவர் அதை தொடர முடியாமல் ஆட்டத்திலிருந்து விலகினார்.

இந்திய கிரிக்கெட் கவுன்சில் யுவராஜை பெருமைப்படுத்தும் விதமாக 2012 ல் அர்ஜுனா விருதை அளித்தது. இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ விருதை கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து யுவராஜ் விலகினாலும் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்ற ஒரு பட்டியலை தயாரித்தால் அதில் முதல் 10 பேரில் கண்டிப்பாக யுவராஜ் இருப்பார். பல மில்லியன் மக்களின் நம்பிக்கை நாயகனாக யுவராஜ் சிங் இருந்தார்.. இருக்கிறார்.. எப்போதும் இருப்பார்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணியின் வெற்றியை அரைநிர்வாணமாக கொண்டாடிய நடிகை பூனம் பாண்டே!