இந்த ஐபிஎல் சீசனில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத மும்பை அணி இன்றாவது வெற்றியை ருசிக்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
கடந்த ஐபிஎல் போட்டிகளை விட இந்த சீசன் பரபரப்பாகவும், அதே சமயம் பெரும் மாற்றங்களையும் சந்தித்து வருகிறது. வழக்கமாக பின்னி பெடலெடுக்கும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளிடம் சின்ன சுணக்கம் நிலவி வரும் நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் என மற்ற அணிகள் புகுந்து விளையாடி வருகின்றன.
இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெல்லாத மும்பை இந்தியன்ஸ் அணி இன்று பிற்பகல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை போட்டியிட்ட 4 போட்டிகளில் 1ல் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 9 மற்றும் 10வது இடத்தில் உள்ளன.
இந்நிலையில் இன்று டெல்லி அணியையாவது மும்பை வெற்றிக் கொண்டு முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. மும்பை அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா என நல்ல பேட்டிங் ஃபார்ம் இருந்தாலும், விக்கெட்டுகள் விழுந்தால் அடுத்தடுத்து எல்லாரும் வெளியேறி விடுவதால் சிக்கல் உள்ளது. டெல்லி அணியிலும் ஓப்பனிங் இறங்கும் டேவிட் வார்னர், மிட்ஷல் மார்ச் விக்கெட் விழுந்தால் நிலமை சிரமமாக உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.