Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'திறந்த உறவுமுறை' மீதான மோகம் மேற்கு நாடுகளில் அதிகரிப்பது ஏன்? வல்லுநர்கள் அடுக்கும் காரணங்கள்

Advertiesment
abuse
, திங்கள், 10 அக்டோபர் 2022 (21:08 IST)
ஒருவருடன் உறுதியான உறவில் (committed relationship) இருக்கும்போது பாலியல் தேவைக்காக கூடுதல் துணையை வைத்துக்கொள்வதை சமூகக் கட்டுப்பாடுகள் தடை செய்துள்ள நிலையில், சமீபகாலமாக Open relationships எனப்படும் கட்டுப்பாடுகளற்ற திருமணத்தை மீறிய உறவு மீதான ஆர்வம் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது.
 
அமெரிக்காவைச் சேர்ந்த டெடெக்கர் வின்ஸ்டன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பலதார மண உறவு முறையை பின்பற்றி வருகிறார். ஆனால் சமீபமாக அதிகரித்திருப்பது போன்ற கட்டுப்பாடுகளற்ற உறவு முறை மீதான ஆர்வத்தை அவர் இதுவரை பார்த்ததில்லை.
 
அமெரிக்கா உள்பட பல இடங்களில் திறந்த உறவு முறை அல்லது கட்டுப்பாடுகளற்ற திருமணத்தை மீறிய உறவு முறை, பாரம்பரியமாகவே தடை செய்யப்பட்ட ஒன்று. 2014ஆம் ஆண்டில், வின்ஸ்டன் 'மல்டிமோரி பாட்காஸ்டை' தொடங்கியபோது, அவரும் அவரது இணை தயாரிப்பாளர்களும் தங்கள் உண்மையான பெயர்களை பலதார மணம் தொடர்பான நிகழ்ச்சியில் பயன்படுத்துவதா, வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியிருந்தது.
 
"அந்த நேரத்தில், ஒன்று அல்லது இரண்டு பாட்காஸ்டுகள் மட்டுமே இந்த விஷயத்தைப் பற்றி பேசின," என்கிறார் 'டேட்டிங்' பயிற்சியாளரான டெடெக்கர் வின்ஸ்டன். புனைப்பெயர்களைப் பயன்படுத்தியே அந்த பாட்காஸ்டு நிகழ்ச்சிகளை அவர்கள் தயாரித்து வழங்கினர்.
 
தற்போது அவை அனைத்தும் மாறி விட்டன. 2016ஆம் ஆண்டில் வின்ஸ்டன் அந்த வகையான உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற டேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றத் தொடங்கிய சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, பலதார மண உறவின் மீதான ஆர்வம் அதிகரிப்பதைக் கவனித்தார்.
 
"திடீரென்று ஆன்லைனில் பல தார மணம் பற்றி பேச பலர் தயாராக இருந்தனர். மேலும் தங்களுக்கு இவற்றில் ஆர்வம் உள்ளது என்ற உண்மையையும் அவர்கள் வெளிப்படுத்துவதைப் பார்த்தபோது மிகப்பெரும் திருப்புமுனையைக் கண்டதுபோல நான் உணர்ந்தேன்," என்கிறார் வின்ஸ்டன்.
 
பாலியல் மற்றும் உறவு இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த கிரியேட்டிவ் ரிலேட்டிங் சைக்காலஜி சைக்கோதெரபியின் ஆலோசகரான சாரா லெவின்சனும், கடந்த பத்தாண்டுகளில் திறந்த உறவு முறை மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் கவனித்துள்ளார். "10 ஆண்டுகளுக்கு முன்பு இது மிகவும் தெளிவற்றதாக இருந்தது. தற்போது நம்பமுடியாத அளவிற்கு பொதுவானதாக உள்ளது" என்கிறார் அவர்.
 
திறந்த உறவுகள் உள்பட பலதார மண உறவுகள் மீதான ஆர்வம் ஒருமித்த கருத்துடன் அதிகரித்து வருவதை சில தரவுகள் காட்டுகின்றன. பல சமூக மற்றும் கலாசார காரணிகள் பாரம்பரியம் அல்லாத உறவு முறைகளை பரவலாக ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்துள்ளதாகக் கூறும் வல்லுநர்கள், கொரொனா பெருந்தொற்று காலமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
 
அதே நேரத்தில் திறந்த உறவு முறை மீதான அதிகரிக்கும் ஆர்வம் எந்த அளவிற்கு பரந்ததாக இருக்கும் என்பது குறித்து வல்லுநர்களிடம் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
 
 
பலதார மணத்தில் ஈடுபட பல வழிகள் உள்ளன என்கிறார் லெவின்சன். "இது ஒன்றுக்கும் மேற்பட்ட துணைகளுடன் வாழ்வது மற்றும் நிதிகளைப் பகிர்ந்து கொள்வது போன்றவையாக இருக்கலாம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை தங்கள் துணையை வேறுஒருவருடன் உறவு கொள்ள அனுமதிப்பதாக இருக்கலாம்," என்கிறார் அவர்.
 
திறந்த உறவு முறை பலதார மண குடையின் கீழ் வரும். ஆனால் இது பாலிமரி உறவு முறையில் இருந்து வேறுபட்டது. பாலிமரி என்பது பலருடன் நெருக்கமான உறவில் இருப்பதைக் குறிக்கிறது. அதே நேரத்தில் திறந்த உறவு முறை முதன்மையாக பாலியல் உறவுகளில் ஈடுபடும் நபர்களுடன் தொடர்புடையது. வேறு வார்த்தையில் கூறுவதென்றால், திறந்த உறவுகள் முதன்மை உறவுக்கு வெளியே உள்ளவர்களுடன் உணர்ச்சிப்பூர்வமான தொடர்புகளில் குறைவாகவும், பாலியல் உறவுகளில் அதிகமாகவும் கவனம் செலுத்துகின்றன.
 
சிலருக்கு, இது மற்றொரு துணையுடன் வழக்கமான டேட்டிங் செல்வது மற்றும் 'friends-with-benefits' எனப்படும் உறவுகளைக் கொண்டிருப்பதாக இருக்கலாம். சிலருக்கு திறந்த உறவு என்பது எப்போதாவது தங்கள் துணையை வேறு ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அனுமதிப்பதாக இருக்கலாம்.
 
சிலருக்கு மற்ற ஜோடிகளுடன் ஜோடியாக உடலுறவு கொள்வதாக இருக்கலாம். 'கேட்காதே, சொல்லாதே' பாணியிலான திறந்த உறவுகளை சிலர் கொண்டுள்ளதாக வின்ஸ்டன் கூறுகிறார்.
 
இந்த முறையில் ஆண், பெண் இருவருமே தங்களுடைய துணையை மற்றவர்களுடன் உடலுறவு கொள்ள அனுமதிக்கிறார்கள். ஆனால், அந்த அனுபவங்களை அவர்கள் ஒன்றாக விவாதிக்க விரும்பவில்லை.
 
அமெரிக்காவைச் சேர்ந்த உறவுமுறை மற்றும் பாலியல் கட்டுரையாளர் டான் சாவேஜ், பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலப்படுத்திய 'மோனோகாமிஷ்' உறவுமுறை, திறந்த உறவு முறையின் சில வரையறையோடு ஒத்துப்போகலாம்.
 
சாவேஜ் தனது பாட்காஸ்டில் மோனோகாமிஷ் உறவைப் பற்றி விவாதித்தார். இந்த உறவுமுறையில் அவரும் அவரது துணையும் உறுதியான உறவில் இருந்தாலும், மற்றொரு துணையுடன் பாலியல் தேவைக்கான உறவைக் கொண்டுள்ளனர்.
 
எல்லா வகை மக்களும் திறந்த உறவுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, தனது அமர்வுகளில் திறந்த முறை உறவுகளில் பங்கேற்பவர்களிடையே பன்முகத்தன்மையை காண்பதாக லெவின்சன் கூறுகிறார்.
 
எனினும், நியூயார்க் நகரத்தில் ஆலோசகராக பணிபுரியும் அவர், அமெரிக்காவின் பிற பழமைவாத பகுதிகளில் இது வேறாக இருக்கும் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.
 
திறந்த உறவுகளில் பங்கேற்கும் பலர் 25 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருப்பதை தன்னுடைய அனுபவத்தில் அவர் கண்டறிந்துள்ளார். மேலும், அவர்களில் பலர் வினோதமான, இருபால் மற்றும் பான்செக்சுவல் எனப்படும் பாலினத்தை பொருட்படுத்தாத பாலியல் விருப்பம் கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்துகின்றனர். இருப்பினும், 19 வயது இளையவர்கள் முதல் 70 வயது முதியவர்கள் வரை திறந்த உறவுகளில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுடன் அவர் பணியாற்றி இருக்கிறார்.
 
அதிகரிக்கும் ஆர்வம்
 
டேட்டிங் செயலிகளின் ட்ரெண்டிங், திறந்த உறவுகள் மீதான ஆர்வ அதிகரிப்பை காட்டுகின்றன. திறந்த உறவு முறை உட்பட பலதார மண உறவில் கவனம் செலுத்தும் தளங்களின் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்து வருகின்றன. 'OkCupid' போன்ற பாரம்பரிய டேட்டிங் செயலிகளிலும், திறந்த உறவு முறை மீதான ஆர்வ அதிகரிப்பை பார்க்க முடிகிறது.
 
OkCupid செயலியின் பெரும்பாலான பயனர்கள் ஒருதார மண உறவு முறையில் விருப்பம் கொண்டிருக்கும் அதே வேளையில், ஒருதார மணம் இல்லாத உறவுகளைத் தேடும் பயனர்கள் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 7% அதிகரித்துள்ளதாக அந்தச் செயலியின் பிரதிநிதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
பிரிட்டனைச் சேர்ந்த 1 மில்லியனுக்கும் அதிகமான OkCupid பயனர்களிடம் திறந்த உறவு முறையில் உங்களுக்கு விருப்பம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்தவர்களில், 31 சதவிகிதம் பேர் ஆம் என்று தெரிவித்துள்ளனர். இந்த விகிதம் 2021இல் 29 சதவிகிதமாகவும், 2020இல் 26 சதவிகிதமாகவும் இருந்தது.
 
ஹின்ச் டேட்டிங் செயலியின் பத்தில் ஒரு பயனர் திறந்த உறவு முறையில் ஈடுபட்டுள்ள நிலையில், அதன் 2022ஆம் ஆண்டு தரவுகள் ஐந்தில் ஒரு பயனர் இந்த உறவு முறையை விரும்புவதாகக் கூறுகிறது. இதற்கு கொரொனா பெருந்தொற்று காலம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இருக்கலாம் எனக் கூறும் ஹின்ச் செயலியின் உறவு அறிவியல் இயக்குநர் லோகன் யூரி, நமக்கு என்ன வேண்டும் என்பது பற்றி மேலும் சிந்திப்பதற்கு இது சிறந்த வாய்ப்பு என்று நம்புகிறார்.
 
 
திறந்த உறவு முறை மீதான ஆர்வம் பெரும்பாலும் இளம் தலைமுறையினரிடம் அதிகரித்து வருவதாக வின்ஸ்டன் கூறுகிறார். நீண்ட கால நெருக்கமான உறவு முறையின் இறுதி இலக்கு ஒருதார மணமே என்று கூறி தாங்கள் வளர்க்கப்பட்ட விதத்தை அவர்கள் கேள்விக்குள்ளாக்குவதாகவும் வின்ஸ்டன் கூறுகிறார்.
 
"மரபை மாற்றாத அனைத்து விஷயங்களிலும் நாம் அனைவரும் மிகவும் திறந்த மனதுடன் இருக்கிறோம். தற்போது மக்கள் சமூக கட்டமைப்பிற்கு சவால் விட தயாராக உள்ளனர். மேலும், தங்கள் சொந்த ஆசைகளையும் கேள்விக்கு உட்படுத்துவதற்கான கதவையும் இது திறந்துள்ளது. ஒருதார மண உறவைத் தேர்ந்தெடுத்து, அது பொருந்தவில்லை என்றுவரும் போது, வேறு வழி இருக்கிறதா என்று ஆர்வமாகத் தேடத் தொடங்குகிறார்கள்" என்கிறார் லெவின்சன்.
 
திறந்த உறவு முறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு தற்போது நிறைய வாய்ப்புகள் இருப்பதாக வின்ஸ்டன் கூறுகிறார். இது தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் ஊடகங்களில் இது குறித்து எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறும் அவர், பத்தாண்டுகளுக்கு முன்பு இணையத்தின் ஏதோ ஒரு மூலையில் மட்டுமே இது குறித்த தகவல்கள் கிடைத்ததாகக் கூறுகிறார்.
 
திறந்த உறவுமுறை யதார்த்தத்தை மீறியதா?
 
பலதார மண உறவை நாடுபவர்கள் மற்றும் திறந்த உறவு முறையை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அது குறித்த பார்வை சமூகத்தில் எதிர்மறையானதாகவே உள்ளது.
 
ஒருமித்த கருத்துடன் கூடிய பலதார மண உறவுமுறை பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியிருப்பது ஆராய்ச்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கேட்பு வாக்கெடுப்பு மூலம் தெரியவந்திருப்பதாகக் கூறுகிறார் கின்சி இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளரும் செக்ஸ் மற்றும் சைக்காலஜி பாட்காஸ்டின் தொகுப்பாளருமான டாக்டர் ஜஸ்டின் லெஹ்மில்லர்.
 
அந்த எதிர்மறை விளைவுகள் திறந்த உறவு முறையில் ஈடுபடுவது பற்றி மக்கள் நினைப்பதைத் தடுக்காவிட்டாலும், அந்த உறவில் ஈடுபடுவதைத் தடுக்கலாம். பாலியல் கற்பனைகள் பற்றிய தனது ஆராய்ச்சியில், பெரும்பாலான மக்கள் பலதார உறவு முறையில் இருப்பதைப் பற்றியும், திறந்த உறவு முறை குறித்தும் முன்பே கற்பனை செய்துள்ளதை லெஹ்மில்லர் கண்டறிந்தார். எனினும், ஒப்பீட்டளவில் வெகுசிலரே நிஜ வாழ்க்கையில் இந்த உறவு முறையில் ஈடுபடுவதாக அவர் கூறுகிறார். இந்த உறவு முறையில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த தொற்றுநோய்க்கு பிந்தைய தரவு எதுவும் இல்லை என்றாலும், 2019ஆம் ஆண்டின் கனடாவின் ஓர் ஆராய்ச்சி இந்த எண்ணிக்கையை சுமார் 4 சதவிகிதமாகக் காட்டுகிறது. 2018ஆம் ஆண்டின் அமெரிக்க ஆய்விலும் இதேபோன்ற எண்ணிக்கை வெளிப்பட்டது.
 
சமூக கட்டுப்பாடுகள் போல மத நம்பிக்கைகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட நபருடன் உறவு வைத்துக்கொள்வதைத் தடுப்பதாக லெவின்சன் கூறுகிறார்.
 
இருப்பினும், ஒரு துணையால் தங்களது அனைத்து தேவைகளையும் ஈடுசெய்ய முடியும் என்ற எண்ணத்திலிருந்து இளம்தலைமுறையினர் விலகிச் செல்வதைப் பார்க்க முடிவதாக வின்ஸ்டன் கூறுகிறார். தங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் உறவுகளை உருவாக்கிக்கொள்வதற்காக அவர்கள் பிரிந்து செல்வதாகவும் வின்ஸ்டன் கூறுகிறார்.
 
திறந்த உறவு முறை மீதான ஆர்வம் அதிகரித்துவந்தாலும், இது உலகளாவிய ஒன்றாக மாறும் என்று தான் நினைக்கவில்லை என்கிறார் லெவின்சன். உலகம் முழுவதும் சமூகக் கட்டுப்பாடுகள் பரவலாக இருப்பதாகக் கூறும் லெவின்சன், இந்த உறவு முறையில் ஈடுபடுவது குறித்து எண்ணுவதற்கே பல கலாச்சாரங்கள் சவாலாக இருக்கும் என்கிறார்.
 
ஆனால், OkCupid செயலியின் உலகளாவிய தகவல் தொடர்புத் தலைவர் மைக்கேல் கேய்யிடம் இது குறித்து மாறுபட்ட பார்வை உள்ளது. ஓர் உறவில் தாங்கள் என்ன விரும்புகிறோம் என்பதை அடையாளம் காணுவதில் மக்கள் மிகவும் வெளிப்படையாகவும் திறந்த மனதோடும் இருப்பதாகக் கூறும் அவர், மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு கொள்வது மெல்ல குறைந்து வருவதாகத் தான் நினைப்பதாகவும் கூறுகிறார்.
 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'' எம்,எஸ். தோனி குளோபல் மைதானத்தை'' திறந்துவைத்த' தல'தோனி !