Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுக்ரேனில் இருந்து குடிமக்களை வெளியேறச் சொல்லும் மேற்கு நாடுகள் -

யுக்ரேனில் இருந்து குடிமக்களை வெளியேறச் சொல்லும் மேற்கு நாடுகள் -
, ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (17:54 IST)
யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக பத்துக்கும் மேற்பட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை யுக்ரேனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ள நாடுகளில் அடக்கம்.
 
ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை யுக்ரேன்னை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளன. சிலர், தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரஷ்யா யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது என்றாலும், படையெடுப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று மறுத்து வருகின்றது.இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியபோது, யுக்ரேன் மீது படையெடுப்பு நடந்தால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
 
படையெடுப்பதற்கான எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையால் ஏற்படக்கூடிய பயம்தான் எதிரிகளுக்கு தேவையாக கருதப்படுகிறது. இதற்கான நகர்வுகளாகத்தான் எல்லாம் நடந்து வருகிறது, என யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.யுக்ரேன் மீது எந்த நேரத்திலும் படையெடுப்பு நடக்கலாம் என்றும், வான்வழி குண்டுவீச்சுடன் அது தொடங்கலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. ரஷ்யா,‌ இத்தகைய குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே பரப்பப்படுகிறது என குற்றச்சாட்டை மறுத்துள்ளது.யுக்ரேனின் தலைநகர் கீவ்வில், அமெரிக்க தூதரகத்தில் உள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்த உள்ளனர். இருப்பினும் "அவசர நிலையில் தொடர்பு கெள்ள ", மேற்கு நகரமான லிவிவ்வில் 'சிறிய அளவில் தூதரக அலுவல்கள் நடக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விளம்பரம்
 
அதேபோல், கனடா தனது தூதரக ஊழியர்களையும் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகருக்கு மாற்றுவதாக கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுக்ரேனுக்கான பிரிட்டன் தூதர் மெலிண்டா சிம்மன்ஸ், அவரும் ஒரு "முக்கிய குழுவும்" யுக்ரேனின் தலைநகர் கீவ்வில் உள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.மற்ற நாடுகளை போல ரஷ்யாவும் யுக்ரேனில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகள் இடத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக அவர்கள் கூறுகையில் தற்போது யுக்ரேனில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் அடிப்படையில் பாதுகாப்புக்காக சில மாற்றங்களை செய்து உள்ளோம். மேலும் யுக்ரேன் மற்றும் பிற நாடுகளால் தூதரக அதிகாரிகளுக்கு எந்தவித பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்ததாக ரஷ்யா தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யுக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த சுமார் 150 அமெரிக்க வீரர்களை அந்நாட்டு அரசு திருப்பி அழைத்துள்ளது. மேலும், டச்சு விமான நிறுவனமான KLM, யுக்ரேனுக்கு சேவையை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது, இது உடனடியாக அமலுக்கு வருவதாக டச்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.யுக்ரேன் அதிபர் கூறுகையில், "வர இருக்கும் படையெடுப்பிற்கான உறுதியான ஆதாரம் மேற்கத்திய நாடுகளிடம் இருந்தால், அப்படியான ஆதாரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை", என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், "படையெடுப்புக்கான பல்வேறு செய்திகள் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் யுக்ரேன் மீது ரஷ்யா நிச்சயம் படையெடுக்கும் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல் யாரிடமாவது இருந்தால் அதை எங்களுடன் பகிருங்கள்", என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தக்க பதிலடி கொடுக்கப்படும்
 
யுக்ரேன் எல்லையில் இருக்கும் ரஷ்ய படைகள்.
 
அமெரிக்க அதிபர் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டு, படையெடுப்பு நடந்தால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பேசியதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளனது.அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஏற்படுத்திய "உச்சக்கட்ட பதற்றமான சூழ்நிலை" மத்தியில் இந்த அழைப்பு நடந்ததாக மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் (ரஷ்ய அதிபர் மாளிகை) விவரித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் பாதுகாப்பு சம்பந்தமாக அவர்கள் பொருட்படுத்தவில்லை என்று ஜோ பைடன் இடம் கூறியதாக கூறினர். மேலும், இருநாட்டு தலைவர்களும் தொடர்ந்து பேசுவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மக்ரோங் சனிக்கிழமையன்று விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது , "தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமும் தாங்கள் அளிக்கும் விளக்கமும் ஒத்துப் போகவில்லை" என்று தெரிவித்ததாக பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டுள்ளது.வெளிநாட்டு தூதரகங்கள் ஊழியர்களை திரும்பப் வரச் சொல்லி வருகிறது மற்றும் பல நாடுகள் தங்கள் குடிமக்களை யுக்ரேன் விட்டு வெளியேறச் சொல்லி வருகிறது. எனினும் கீவ்வில் எந்த ஒரு நெருக்கடியும் உணரப்படவில்லை .
 
 
தயாராக இருக்க வேண்டும்
யுக்ரேன் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் , மக்களிடம் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் எனவும், பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த செய்தியாக இருந்தாலும் அதில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று வொலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.யுக்ரேன் முழுவதும், வெளிநாட்டு குடிமக்கள் இப்போது அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். கடந்த 28 ஆண்டுகளாக யுக்ரேனின் தலைநகர் கீவ்வில் வாழ்ந்து வரும் ஸ்டூவர்ட் மெக்கென்சி அங்கு வர்த்தகம் செய்து வருகிறார்.
 
அவர் கூறுகையில், தற்போது தனது மனைவியையும் இரண்டு மகன்களையும் யுக்ரேனை விட்டு விமானத்தின் மூலம் வெளியேற்ற வேண்டும் என்றும் விமானம் கிடைக்கவில்லை என்றால் காரில் ஏற்றிக்கொண்டு தன் குடும்பத்தினரை போலந்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் யுக்ரேனை அவர் நேசிப்பதாகவும், இந்த சூழல் ஏற்பட்டதை நம்ப முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.பிரிட்டிஷ் தூதரகத்தில், அவசர அவசரமாக ஊழியர்கள் காரில் பைகளை ஏற்றிக்கொண்டு செல்வதைக் காணமுடிகிறது எனவும், அவர்கள் யாரிடமும் எதையும் பேச விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
வடக்கே, பெலாரஸின் எல்லையைத் தாண்டி, ரஷ்யாவின் போர்ப் பயிற்சிகள் இப்போது நடந்து வருகின்றன. இதற்கான புகைப்படங்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது எனவும், அவர்கள் வெளியிட்ட அந்த புகைப்படங்களில் பல ராக்கெட் லாஞ்சர்கள் பயன்படுத்துவது தெரிகிறது. ஆனால் ரஷ்ய அரசு இன்னும், படையெடுக்கும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு, யுக்ரேனின் எல்லைகளைத் தாண்ட வேண்டும் என்பதில்லை, ரஷ்யா தான் இருக்கும் இடத்திலிருந்தே தாக்குதல் நடத்த முடியும் என பொதுவாக சொல்லப்படுகிறது.கடந்த சனிக்கிழமை அன்று யுக்ரேனின் தலைநகர் கீவ்வில் , பல ஆயிரம் மக்கள் பேரணியாக சென்றுள்ளனர் , யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகைகளில் கோஷங்களை எழுப்பினர். இந்த அணிவகுப்பு கோனார் என்று அழைக்கப்படும் வலதுசாரி தேசியவாத குழு மற்றும் வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தீவிர வலதுசாரி ஆர்வலர் செர்ஜி ஸ்டெர்னென்கோ ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது அனைவராலும் ஈர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்த பேரணி சம்பந்தமாக பிபிசி செய்தியாளர் எலினோர் மாண்டேக் கூறுகையில், இந்த பேரணி மிகப்பெரியதாக நடைபெற வில்லை என்றாலும், யுக்ரேனில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு நடைபெற்ற ‌மக்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்ட முதல் பேரணியாக இது பார்க்கப்பட்டது எனவும், இந்தப் பேரணி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள மேய்டன் என்ற பிரபலமான இடத்தில் நிறைவடைந்தது எனவும் குறிப்பிட்டார்.
 
இந்தப் பேரணியில் பங்கேற்ற சாஷா நிசெல்ஸ்கா என்பவர் பிபிசியிடம் கூறுகையில், ரஷ்யா படை எடுத்தால் அதை அனைத்து வழிகளிலும் எதிர்ப்பேன் என்று கூறினார். மேலும் இந்தப் பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் இதே உணர்வுடன்தான் பங்கெடுத்தனர் என்று குறிப்பிட்டார்.
 
பெலாரஸில் ராணுவப் பயிற்சி
 
யுக்ரேனின் கிழக்கு எல்லையில் ரஷ்யா தொடர்ந்து படைகளை நிலைநிறுத்தி வருவதால் பதற்றம் படிப்படியாக அதிகரித்துள்ளது. ரஷ்ய படைவீரர்கள் யுக்ரேனின் வடக்கே உள்ள பெலாரஸில் ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றனர் எனவும், அதே நேரத்தில் தென்கிழக்கில் உள்ள அசோவ் கடலில் கடற்படை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறது எனவும், இது உக்ரேனின் கடல் மார்க்கத்தை ரஷ்யா தடுப்பதற்கு என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இதற்கிடையில், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் சுமார் 7,500 கிமீ தொலைவில், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை, அதன் கடல் எல்லைக்குள் கண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் குரில் தீவுகளுக்கு அருகில் இருந்ததாகவும், அப்போது அவர்களை மேலே வர அழைத்ததாகவும், ஆனால் அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் மார்ஷல் ஷபோஷ்னிகோவ் கப்பல் மூலம் எச்சரிக்கப்பட்டது எனவும் அதன்பின் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அப்பகுதியை விட்டு வெளியேறியது என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி நேரில் வந்து விளக்கம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.ஆனால் இதை முழுவதுமாக அமெரிக்கா மறுக்கிறது. இது போல எதுவும் நடக்கவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளனது.இது சம்பந்தமாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கேப்டன் கைல் ரெய்ன்ஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கூறியபோது, "ரஷ்யா கூறுவதில் எந்த உண்மையும் இல்லை", என குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், "ரஷ்யா குறிப்பிட்டுள்ள பகுதிகளில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எதுவும் செல்லவில்லை என மறுத்துள்ளார். அதேபோல பிற நாடுகளுக்கு உட்பட்டு வராத கடல்வழி எல்லைகளில் எங்கள் வீரர்கள் இருக்கிறார்கள்", என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் 70%, உதயநிதி 90%: மார்க் போட்ட எடப்பாடி பழனிசாமி