நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே இந்திய பவுலர்கள் சிக்கனமாகவும் அவ்வப்போது விக்கெட்களை வீழ்த்தியும் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் அந்த அணியால் இறுதியில், 49.4 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
அதன் பின்னர் ஆடிய இந்திய அணி விராட் கோலியின் சிறப்பான சதத்தால் எளிதாக 43 ஆவது ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தனது வித்தியாசமானக் கொண்டாட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்தார் பாகிஸ்தான் வீரர் அப்ரார். இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு அவரை வெளியேறும்படி முகத்தில் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலானது. அவர் அந்த விக்கெட்டை எடுத்த போதே பாகிஸ்தானின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. ஆனாலும் கில் விக்கெட்டுக்கு அவர் அப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்தது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் “அப்ராரின் அந்த ரியாக்ஷன் தேவையில்லாதது. போட்டியில் நீங்கள் வென்றிருந்தால் சரி. ஆனால் நீங்களே பின்தங்கி உள்ளீர்கள். கொண்டாடுவதற்கு என்று இடம் பொருள் ஏவல் உள்ளது. இதை அவரிடம் அந்த நேரத்தில் சொல்ல யாரும் இல்லை.” எனக் கூறியுள்ளார்.