இலங்கையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் மற்ற மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து சிறப்பாக விளையாடி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் இலங்கை டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர். 54 ரன்கள் சேர்த்த சதீரா சமரவிக்ரமா மொயின் அலி பந்து வீச்சில் போல்டு ஆனார். அதையடுத்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் சண்டிமால் மற்றோரு தொடக்க வீரரான டிக்வெல்லாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய டிக்வெல்ல 95 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார். அதன் பின்னர் சண்டிமாலும் குசால் மெண்டிஸும் இணைந்து மின்னல் வேகத்தில் ரன்குவிக்க ஆரம்பித்தனர். சண்டிமால் 83 ரன்களும் மெண்டிஸ் 56 ரன்களும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சீராக விளையாட இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன் மற்றும் மொயின் தலா 2 விக்கெட்களை அதிகபட்சமாகக் கைப்பற்றினர்.
அதையடுத்து 367 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து ரன்குவிக்க முடியாமல் தடுமாறியது. இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்-67 மற்றும் மொயின் அலி-37 ஆகிய இருவர் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க எண்களிலேயே அவுட் ஆகி வெளியேறினர்.
இங்கிலாந்து 26.1 ஓவர்கள் முடிவில் 132 ரன்களை சேர்த்து 9 விக்கெட்டை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. வெகுநேரமாகியும் மழை விடாததால் நடுவர்கள் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இங்கிலாந்து 219 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவித்தனர். இங்கிலாந்து அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் அடைந்த மிகப்பெரிய தோல்வி இதுவேயாகும்.
ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட இலங்கை அணிக்கு இந்த வெற்றி ஒரு ஆறுதலைக் கொடுத்துள்ளது. இலங்கையின் டிக்வெல்லா ஆட்டநாயகனாகவும் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இவ்விரு அணிகளும் மோதும் இருபது ஓவர் போட்டி வரும் 23-ந்தேதி நடக்க இருக்கிறது.