Publish Date: Wed, 27 Mar 2024 (07:22 IST)
Updated Date: Wed, 27 Mar 2024 (07:26 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனின் முக்கியமானப் போட்டிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 206 ரன்கள் சேர்த்தது.
இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சிறப்பாக விளையாடினார். ஒரு கட்டத்தில் தோனி எப்போது பேட்டிங் செய்ய வருவார் என ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கினர். அதற்கேற்றார் போல ஷிவம் துபே விக்கெட் விழ தோனி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவம் ரிஸ்வி பேட் செய்ய வந்தார்.
அப்போது மைதானத்தில் ரசிகர்களின் தோனி தோனி என்ற கோஷம் காதை செவிடாக்கும் அளவுக்கு இருந்தது. ஆனால் அந்த கோஷத்தை தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அமைதியாக்கினார் ரிஸ்வி. அதன் பிறகு அதே ஓவரின் கடைசி பந்திலும் மற்றொரு சிக்ஸ் அடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.
மொத்தம் 6 பந்துகளை சந்தித்த ரிஸ்வி 14 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ஆனால் அவரின் இந்த இன்னிங்ஸ் சி எஸ் கே அணிக்கு மற்றொரு அதிரடி பினிஷர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அவரை இந்த சீசனில்தான் சி எஸ் கே அணி 8.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
vinoth
Publish Date: Wed, 27 Mar 2024 (07:22 IST)
Updated Date: Wed, 27 Mar 2024 (07:26 IST)