வீரர்களை நாடு திரும்ப அனுமதித்தமைக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டது. இதனை அடுத்து சமீபத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி நடக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த போட்டியில் ரத்து செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 15 ஆம் தேதி லக்னோவிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 18 ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடப்பதாக இருந்தது.
ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்ததால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பினர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் இடைக்கால தலைமை நிர்வாகி ஜேக்யூஸ் ஃபால் தெரிவித்துள்ளதாவது...
எங்களது வீரர்களை உடனடியாக நாடு திரும்ப அனுமதித்த பிசிசிஐ-க்கு நன்றி. இந்த முடிவை எடுப்பது அவ்வளது எளிதல்ல. இதனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டிருக்கும். கடினமான சூழ்நிலையை புரிந்து கொண்டதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.