ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. ஐபிஎல் பார்த்து உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தொடர் சலிப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இதுவரை நடந்த போட்டிகள் பெரும்பாலானவை எல்லாம் குறைந்த ஸ்கோர் அடிக்கப்பட்ட போட்டிகளாகவே அமைந்துள்ளது. இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டும் 200 ரன்களை தாண்டி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியும் ஒரு லோ ஸ்கோர் போட்டியாகவே நடந்து முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த எளிய இலக்கை எளிதாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா 3 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் இந்த போட்டியின் முடிவு நெதர்லாந்துக்கு சாதகமாக அமையுமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அந்த அணியின் டேவிட் மில்லர் நிலைத்து நின்று ஆடி தென்னாப்பிரிக்க அணியை வெற்றிப் பெற வைத்தார். அவர் 51 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.